தமிழகம்

வில்லிவாக்கத்தில் சிலை வைத்து விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதி: சென்னை ஐகோர்ட் உத்தரவு

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: வில்லிவாக்கத்தில் சிலை வைத்து விநாயகர் சதுர்த்தி கொண்டாட இந்து மக்கள் கட்சிக்கு அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்து மக்கள் கட்சியை சேர்ந்த ஹரி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், வில்லிவாக்கம் ஒத்தவாடி தெருவில் சிலை வைத்து விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதிக்க கோரி காவல் துறையிடம் விண்ணப்பித்ததாகவும் இதுவரை தமது கோரிக்கை பரிசீலிக்கப்படவில்லை எனவும் மனுவில் தெரிவித்தார்.

இந்த மனு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.எம்.டி. முகிலன் அனுமதி கோரும் இடம் மிகவும் குறுகலானது எனவும் சிலை வைக்க இடத்தின் உரிமையாளர் அனுமதி கொடுத்துள்ளாரா ? என்பது குறித்து தெரியவில்லை எனவும் கூறினார்.

மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கடந்த இரண்டு ஆண்டுகளாக அதே இடத்தில் சிலை வைத்து விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டதாக கூறினார். இதனையடுத்து, இரு தரப்பு வாதங்களையும் கேட்டுக் கொண்ட நீதிபதி, மனுதாரர் குறிப்பிட்டுள்ள வில்லிவாக்கம் பகுதியில் சிலை வைத்து விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT