தமிழகம்

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்திற்கு எதிரான பொதுநல மனு தள்ளுபடி: ஐகோர்ட் உத்தரவு

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் முதல்வர் பெயரை சேர்க்க எதிர்ப்பு தெரிவித்த பொது நல மனுவை, ஒரு லட்சம் ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசு திட்டங்கள் மக்களை சென்றடையும் வகையில் செயல்படுத்தப்படும் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் முதல்வர் பெயரை பயன்படுத்த தடை கோரி, அதிமுக வழக்கறிஞர் இனியன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார்.

இதேபோல, முன்னாள் அமைச்சர் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், வாழும் ஆளுமைகளின் பெயர்களை திட்டங்களுக்கு சூட்டக் கூடாது என உத்தரவிட்டிருந்தது. ஆனால், உங்களுடன் ஸ்டாலின், நலம் காக்கும் ஸ்டாலின் திட்டங்களை அதே பெயரில் செயல்படுத்த அனுமதி கோரி அரசுத் தரப்பில் திருத்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து, திமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், சி.வி.சண்முகத்துக்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தள்ளுபடி செய்திருந்தது.

இந்நிலையில், தமிழக அரசின் திருத்த மனு, அதிமுக வழக்கறிஞர் இனியன் தாக்கல் செய்த மனுக்கள், தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தன.

அப்போது, தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ் ராமன் மற்றும் திமுக தரப்பு மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆகியோர், இதே கோரிக்கையுடன் சி.வி.சண்முகம் தாக்கல் செய்த மனுவை அபராதத்துடன் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதாகக் கூறி, உத்தரவு நகலை தாக்கல் செய்தனர்.

உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், சி.வி.சண்முகம், 10 லட்சம் ரூபாய் அபராதத்தை செலுத்தி விட்டதாக, தலைம வழக்கறிஞர் தெரிவித்தார். இதனையடுத்து, வழக்கறிஞர் இனியனின் மனுவை ஒரு லட்சம் ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT