அயனாவரம் மார்க்கெட்டில் நடைபாதை வியாபாரிகளுக்கான வணிக வளாகம் கட்டி முடிக் கப்பட்டு, மூன்றரை ஆண்டுகளுக்கு மேலாகியும் பயன்பாட்டுக்கு வர வில்லை. நடைபாதை வியாபாரம் தொடர்வதால் போக்குவரத்து நெரிசலும் அப்பகுதியில் தொடர் கதையாகி, மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.
சென்னை மாநகராட்சி அண்ணாநகர் மண்டலம் 96-வது வார்டுக்கு உட்பட்டது அயனாவரம் பாலவாயல் சாலை. இந்த சாலை மற்றும் இதையொட்டிய பகுதிகளில் காய்கறி கடைகள் உள்பட பல்வேறு வகையான நடைபாதை கடைகள் பல ஆண்டுகளாக உள்ளன. இதன் காரணமாக இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.
எனவே, நடைபாதை வியாபாரிக ளுக்காக, 2008-ம் ஆண்டு ரூ.1.19 கோடி செலவில், இரு தளம் கொண்ட வணிக வளாகம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. பணி முடிந்து மூன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும், அந்த வளாகம் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை. இதுகுறித்து அயனாaவரம் பகுதியை சேர்ந்த ஜெயராமன் தெரிவித்ததாவது:
8 அடியான 20 அடி சாலை
அயனாவரம் பாலவாயல் சாலை மார்க்கெட் பகுதியில் 35 ஆண்டுகளுக்கு முன்பு 30 நடைபாதைக் கடைகள் இருந்தன. தற்போது நூற்றுக்கும் மேலாகப் பெருகிவிட்டன. இந்த கடைகளின் ஆக்கிரமிப்பால், 20 அடி சாலையான பாலவாயல் சாலை 8 அடியாகச் சுருங்கிவிட்டது. இதனால், போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. பாலவாயல் சாலையை ஒட்டியுள்ள என்.எம்.கே. தெரு, ராமசாமி தெரு, திருப்பாச்சி தெரு, பழனியாண்டவர் கோவில் தெரு, மேட்டுத் தெரு உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்ட தெருக்களில் வசிக்கும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் அயனாவரம் கொன்னூர் நெடுஞ்சாலைக்கு எளிதில் செல்லமுடியாமல் அவதிப்படுகின்றனர். பாலவாயல் சாலையில் ஆம்புலன்ஸ்கூட செல்லமுடியாத நிலை நீடிக்கிறது. பாலவாயல் சாலையை ஒட்டியுள்ள பள்ளிகள், மருத்துவமனைகளுக்கு எளிதாக செல்ல முடியாமல், மாணவர்கள், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். இவ்வாறு ஜெயராமன் தெரிவித்தார்.
‘தம்மாத்தூண்டு கடைகள்’
பாலவாயல் சாலை நடை பாதையில் காய்கறிக் கடை வைத் திருக்கும் இளவரசி கூறும்போது, ‘‘புதிதாக கட்டப்பட்ட வணிக வளாகத்தில் 150-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.
நடைபாதை வியாபாரிகளுக்கு மட்டுமின்றி, பழைய மார்க்கெட்டில் காய்கறிக் கடைகள், மீன் கடைகள், இறைச்சி கடைகள் வைத்திருந்தவர்களுக்கும் இங்கு கடைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்த கடைகள் எல்லாம் மிகவும் சிறியதாக, உரிய தடுப்புகளின்றி உள்ளன. அதனால்தான், வியாபாரி கள் யாரும் வணிக வளாகத்தில் கடை போடவில்லை’’ என்றார்.
‘விரைவில் பிரச்சினை தீரும்’
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது:
நடைபாதை வியாபாரிகள் கேட்ட வசதிகள் அனைத்தும் அயனாவரம் வணிக வளாகத்தில் செய்துதரப்பட்டுள்ளன. அரசு விதிமுறைப்படியே கடைகளின் அளவுகள் உள்ளன. அந்த வளாகத்தில் தற்போது நடைபாதை வியாபாரிகளுக்கான கமிட்டி தலைவர் மூலம் 123 கடைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மற்ற கடைகளும் விரைவில் ஒதுக் கப்படும். நடைபாதை வியாபாரிகள் வணிக வளாகத்துக்கு சென்று விட்டால், பாலவாயல் சாலையில் தொடரும் போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
இவ்வாறு மாநகராட்சி அதிகாரி தெரிவித்தார்.
மீண்டும் மீண்டும் திறப்புவிழா!
நடைபாதை வியாபாரிகளுக்காக கட்டப்பட்ட வணிக வளாகத்தை மு.க.ஸ்டாலின் 2010- ம் ஆண்டில் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். அதன் பிறகும் மக்கள் பயன்பாட்டுக்கு வணிக வளாகம் வரவில்லை. இதையடுத்து, மேயர் சைதை துரைசாமி அந்த வளாகத்தை கடந்த ஆண்டு இறுதியில் நேரில் திறந்து வைத்தார். அதன் பிறகும், வணிக வளாகம் பயன்பாட்டுக்கு வரவில்லை.