தமிழகம்

போக்சோ சட்டத்தை தவறாக பயன்படுத்தினால் நடவடிக்கை: தமிழக காவல் துறை எச்சரிக்கை

அனலி

சென்னை: போக்சோ சட்டத்தினை தவறாக பயன்படுத்தி பொய் புகார் அளிப்பவர்கள் மீது போக்சோ சட்டம் பிரிவு 22 (1)ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில், “போக்சோ சட்டத்தினை தவறாக பயன்படுத்தி பொய் புகார் அளிப்பவர்கள் மீது போக்சோ சட்டம் பிரிவு 22 (1)ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் . கிழக்கு மண்டலம், மயிலாப்பூர் மாவட்டம். ராயப்பேட்டை சரகம் W23 அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெண் ஒருவர் தனது மாமனார் தன் குழந்தையை பாலியல் வன் கொடுமை செய்ததாக கொடுத்த புகாரில் W23 அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடை பெற்று வந்தது.

விசாரணையில் புகார்தாரரின் கணவர் ME படித்து விட்டு எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வருவதாகவும் இதை புகார்தாரரின் மாமனார் கேட்டு சண்டை போடுவதால் இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டதாகவும் இதை காரணமாக வைத்துக்கொண்டு தன் கணவரின் பேச்சை கேட்டு தன் மாமனார் மீது உண்மைக்கு புறம்பாக புகார் கொடுத்தது விசாரணையில் தெரிய வருகிறது.

மேற்படி புலன் விசாரணையில் புகார்தாரர் தனது மாமனார் மீது உண்மைக்கு புறம்பாக புகார் கொடுத்ததால் சட்டவிதிகளின் படி புகார்தாரர் மீது வழக்கு பதிவு செய்ய உரிய நீதிமன்றத்தில் உத்தரவு பெறப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை தருபவர்களுக்கு உரிய தண்டனை, வழங்கும் உயரிய நோக்கிலும், அமல்படுத்தப்பட்ட போக்சோ சட்டத்தினை தவறாக பயன்படுத்தி பொய் புகார் அளிப்பவர்கள் மீது போக்சோ சட்டம் பிரிவு 22 (1) இன் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

SCROLL FOR NEXT