சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை டெல்லி பாஜக தலைவர்கள் தான் சமாதானப்படுத்த வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார். சென்னையில் போராடி வரும் தூய்மைப் பணியாளர்களை சந்தித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆதரவு தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கையை உறுதியாக அரசு நிறைவேற்ற வேண்டும். அவர்களை மீண்டும் பழைய முறைப்படி பணி அமர்த்த வேண்டும். திமுக தேர்தல் அறிக்கையில் கூறிவிட்டு இப்போது அவர்களது போராட்டத்தை எப்படியாவது தடுக்க முயல்கிறார்கள். முதல்வர் நேரடியாக வந்து பேச வேண்டும்.
யாருக்கு தோல்வி முகம் என்பதை வரும் தேர்தலில் மக்கள்காட்டுவார்கள். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நான் இணையக் காரணமே திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதுதான். முன்னாள் முதல்வர் எம்ஜிஆர், ஜெயலலிதா குறித்து திருமாவளவன் பேசியிருப்பது, அவர் குழப்பத்தில் இருப்பதை காட்டுகிறது. மறைந்த தலைவர்கள் பற்றி பேசும்போது கவனமாக பேச வேண்டும்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மீண்டும் கூட்டணிக்கு வருவார் என நம்புகிறேன். பன்னீர் செல்வத்தை டெல்லியில் உள்ள பாஜக தலைவர்கள்தான் சமாதானப்படுத்த வேண்டும். பாஜக தேசிய பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் அழைத்ததாகவும் நான் அவரை சந்திக்க மறுத்ததாக சொல்லப்படும் செய்தி உண்மையில்லை எனவும் பன்னீர்செல்வம் என்னிடம் சொன்னார். இவ்வாறு தெரிவித்தார்.