தமிழகம்

முருகன் வரலாறா அல்லது மு.க.ஸ்டாலின் வரலாறா? - அன்புமணி சாடல்

வெற்றி மயிலோன்

சென்னை: பழனியில் முருகன் வரலாறு என்ற பெயரில் மு.க.ஸ்டாலின் புகழ் பாடப்படுவதைக் காணும்போது மு.க.ஸ்டாலின் எப்போது முருகராக மாறினார் என்ற வினா எழுவதாக பக்தர்கள் கூறுகின்றனர் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பழனி முருகன் கோயிலில் வழிபாடு நடத்தச் செல்லும் பக்தர்களிடம் முருகப் பெருமான் வரலாறு என்று கூறி, ரூ.2700 விலை கொண்ட முருகன் மாநாட்டு மலர் கட்டாயமாக விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதைவிடக் கொடுமை என்னவென்றால், முருகன் வரலாறு என்று கூறி விற்பனை செய்யப்படும் நூலின் பெரும்பாலான பக்கங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு ஆகியோரின் கருத்துகளும், அவர்களின் புகைப்படங்களும் நிறைந்திருப்பது தான்.

முருகன் வரலாறு என்ற பெயரில் மு.க.ஸ்டாலின் புகழ் பாடப்படுவதைக் காணும் போது மு.க.ஸ்டாலின் எப்போது முருகராக மாறினார் என்ற வினா எழுவதாக பக்தர்கள் கூறுகின்றனர். அய்யோ பாவம்... திராவிட ஆட்சியாளர்களின் அகராதியில் ’ஆண்டவர்’களை ஆள்பவர்களே உயர்ந்தவர்கள் என்று எழுதப்பட்டிருப்பது அவர்களுக்கு தெரியாது’ எனத் தெரிவித்துள்ளார்

SCROLL FOR NEXT