தமிழகம்

ராட்வீலர் உள்ளிட்ட ஆக்ரோஷமான நாய்களை முறைப்படுத்த கோரிய வழக்கு: தலைமை கால்நடை அதிகாரி ஆஜராக உத்தரவு

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: சென்னையில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள ராட்வீலர் உள்ளிட்ட ஆக்ரோஷமான நாய்களை முறைப்படுத்தக் கோரிய வழக்கில், உரிய விளக்கங்களுடன் ஆகஸ்ட் 12 ஆம் தேதி நேரில் ஆஜராகும்படி, தலைமை கால்நடை அதிகாரிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில், உரிய பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாமல் அழைத்துச் செல்லப்பட்ட ராட்வீலர் நாய்கள் கடித்து சிறுவர் - சிறுமியர், வயதானோர் பாதிக்கப்பட்டுள்ளதால், இதுபோன்ற ஆக்ரோஷமான நாய்களை தடை செய்வது அல்லது முறைப்படுத்துவதற்கு சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி, கோடம்பாக்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆர்.எஸ்.தமிழ்வேந்தன் என்பவர் பொது நல வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, பொதுமக்களை நாய்கள் தாக்கும் சம்பவங்களை கட்டுப்படுத்துவது குறித்த திட்டத்தை தாக்கல் செய்ய இருப்பதாகவும், அதற்கு அவகாசம் வழங்க வேண்டும் என சென்னை மாநகராட்சி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து, பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள ராட்வீலர் உள்ளிட்ட ஆக்ரோஷமான நாய்களை கட்டுப்படுத்துவது குறித்த விளக்கங்களுடன் ஆகஸ்ட் 12 ஆம் தேதி நேரில் ஆஜராகும்படி, தலைமை கால்நடை அதிகாரிக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை அன்றைய தினத்துக்கு தள்ளிவைத்தனர்.

SCROLL FOR NEXT