தமிழகம்

பாஜக நிர்வாகி ஜாமீன் விவகாரம்: புகார்தாரரின் ஆட்சேபத்தை பரிசீலிக்க சேலம் நீதிமன்றத்துக்கு ஐகோர்ட் உத்தரவு

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: வன்கொடுமை தடைச் சட்ட வழக்கில் பாரதிய ஜனதா கட்சி ஸ்டார்ட்அப் விங் மாநிலச் செயலாளர் சிபி சக்கரவர்த்தி மற்றும் அவரது பெற்றோர் சரணடைந்து ஜாமீன் கோரினால், புகார்தாரரின் ஆட்சேபத்தை கேட்டு முடிவெடுக்க வேண்டும் என சேலம் சிறப்பு நீதிமன்றத்துக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலம், ஏற்காட்டில் நிலப் பிரச்சினை தொடர்பாக, பக்கத்து எஸ்டேட் காவலாளி வெள்ளையன் என்பவரை, பாரதிய ஜனதா கட்சி மாநிலச் செயலாளர் சிபி சக்கரவர்த்தி மற்றும் 3 பேர் சேர்ந்து, கடுமையாக தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, சிபி சக்கரவர்த்தி, தன்னை சாதிப்பெயரை கூறி திட்டி, தாக்கியதாக வெள்ளையன் அளித்த புகாரின் அடிப்படையில், ஏற்காடு போலீஸார், சிபி சக்கரவர்த்தி, அவரது தந்தை மணவாளன், மனைவி சித்ரா ஆகியோருக்கு எதிராக வன்கொடுமை தடைச் சட்டம் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக, சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்த நாளில் ஜாமீன் வழங்கக் கோரி, சிபி சக்கரவர்த்தி மற்றும் அவரது பெற்றோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவில், தங்களுக்கு சொந்தமான நிலத்தை அபகரிக்க முயற்சித்ததாக புகார் அளித்ததால், பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளது எனவும், முன் ஜாமீன் பெறுவதை தடுக்கும் நோக்கத்தில் வன்கொடுமை தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மனுவை விசாரித்த நீதிபதி பரத சக்கரவர்த்தி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் சரணடைந்து ஜாமீன் கோரும் போது, புகார்தாரரின் ஆட்சேபங்களை கேட்ட பின் ஜாமீன் மனு மீது முடிவெடுக்க வேண்டும் என சேலம் சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT