தமிழகம்

செந்தில் பாலாஜியின் சகோதரர் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல ஐகோர்ட் அனுமதி

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல நிபந்தனைகளுடன் சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இதய சிகிச்சை மேற்கொள்ள அமெரிக்கா செல்ல அனுமதி கோரி அசோக்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, அசோக்குமார் அமெரிக்கா செல்ல அனுமதித்தால் என்னென்ன நிபந்தனைகளை விதிக்கலாம் என அமலாக்கத்துறை பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில், இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆஜரான அமலாக்கத்துறை வழக்கறிஞர், நிபந்தனைகள் அடங்கிய பட்டியல் தாக்கல் செய்தார்.

இதனையடுத்து, இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், விசாரணை நீதிமன்றத்தில் ஐந்து லட்சம் ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டுமெனவும், மகளின் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டு அசோக்குமார் அமெரிக்கா செல்ல அனுமதியளித்தனர்.

SCROLL FOR NEXT