தமிழகம்

ஊபர் செயலியில் மெட்ரோ பயணச்சீட்டு பெறும் வசதி அறிமுகம்: 2-ம் கட்ட மெட்ரோ ரயில்கள் டிசம்பரில் இயக்கம்

செய்திப்பிரிவு

சென்னை: மெட்ரோ ரயில் பயணச் சீட்​டு​களை ஊபர் செயலி​யில் பெறும் வசதி தொடங்​கப்​பட்​டுள்​ளது. 2-ம் கட்ட மெட்ரோ திட்டத்​தில் ஒரு வழித்​தடத்​தில் டிசம்​பர் மாதத்​தில் ரயில்​கள் இயக்​கப்​படும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண் இயக்​குநர் மு.அ.சித்​திக் தெரி​வித்​தார்.

சென்னை நந்​தனத்​தில் உள்ள மெட்ரோ ரயில் நிறு​வனத்​தின் தலைமை அலு​வல​கம் மெட்​ரோஸில் நேற்று நடை​பெற்ற நிகழ்ச்சியில் ஊபர் (UBER) செயலி மூலம் மெட்ரோ ரயில் பயணச்​சீட்டு பெரும் வசதியை சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண் இயக்​குநர் மு.அ.சித்​திக் தொடங்​கி​வைத்​தார்.

சென்னை மெட்​ரோ, ஒஎன்​டிசி மற்​றும் ஊபர் நிறு​வனங்​கள் இணைந்து இந்த திட்​டத்தை செயல்​படுத்​தி​யுள்​ளன. இதில் சென்னையில் உள்ள ஊபர் பயனாளர்​கள், க்யூஆர் அடிப்​படையி​லான பயணச்​சீட்​டு​களை பெறு​வதோடு மெட்ரோ பயண தகவல்களை​யும் ஊபர் செயலி​யில் தெரிந்​து ​கொள்​ளலாம். அறி​முகச் சலுகை​யாக இந்த ஆகஸ்ட் மாதம் முழு​வதும் ஊபர் செயலியைப் பயன்​படுத்தி மெட்ரோ பயணச்​சீட்​டு​களை வாங்​கும் பயணி​கள் 50 சதவீதம் தள்​ளு​படி பெறலாம்.

மேலும் மெட்ரோ ரயில் நிலை​யங்​களி​லிருந்து வேறு இடத்​துக்கோ வேறு இடத்​திலிருந்து மெட்ரோ ரயில் நிலை​யம் வரை​யிலோ பயணிக்க ஊபர் செயலி​யில் கார், ஆட்​டோ, பைக் புக் செய்​தால் அதி​லும் 50 சதவீதம் தள்​ளு​படி வழங்​கப்​படும் என தெரிவிக்கப்பட்​டது.

கிளாம்பாக்கம் வரை மெட்ரோ: நிகழ்ச்​சிக்​குப் பின் சென்னை மெட்ரோ ரயில் மேலாண் இயக்​குநர் சித்​திக் நிருபர்​களிடம் கூறிய​தாவது: மெட்ரோ ரயில் மக்​களைச் சென்​றடைய வேண்​டும் எனத் தொடர்ந்து முயற்சி செய்து வரு​கிறோம். வாட்​ஸ்​-அப், டிஜிட்​டல் பரிவர்த்​தனை செயலிகள் எனப் பல வழிகளில் மெட்ரோ பயணச்​சீட்​டு​களை வழங்கி வரு​கிறோம். தற்​போது ஊபர் உடன் இணைந்​துள்​ளோம். இந்த சேவையை வழங்க நாங்​கள் யாரை​யும் தேர்ந்​தெடுக்​க​வில்​லை.

அவர்​கள்​தான் எங்​களைத் தேர்ந்​தெடுக்​கிறார்​கள். எங்​களு​டைய பயணச்​சீட்டு நடை​முறை​களை கோரி அதற்கு ஏற்​றார் ​போல்யார் வேண்​டு​மா​னாலும் வந்து மெட்​ரோவுடன் இணைந்து பணி​யாற்​றலாம். கூகுள் மேப்​ஸை​யும் இணைப்​ப​தற்​கான பணிகளை மேற்​கொண்டு வரு​கிறோம். சென்னை விமான நிலை​யம் முதல் கிளாம்​பாக்​கம் வரையி​லான மெட்ரோ ரயில் பணிகளுக்​கான விரி​வான திட்ட அறிக்​கையை மத்​திய அரசுக்கு அனுப்​பி​யுள்​ளோம். அது பரிசீலனை​யில் உள்​ளது.

மத்​திய அரசின் ஒப்​புதலை எதிர்​பார்த்​துக் கொண்​டிருக்​கிறோம். நிச்​ச​யம் ஒப்​புதல் கிடைக்​கும். அதற்கு தேவை​யான நிலம் எடுக்கும் பணி​களும் மற்ற பணி​களும் நடை​பெற்று வரு​கின்​றன. சென்​னை​யில் வாட்​டர் மெட்ரோ சாத்​தி​யம் தான்.

நெடுஞ்சாலைத் துறை​யும், சிறு துறை​முகங்​கள் துறை​யும் அதற்​கான பணி​களை முன்​னெடுத்​துள்​ளன; பொறுத்​திருந்து பார்ப்​போம். மதுரை, கோவை நிலம் எடுப்பு கடற்​கரை - வேளச்​சேரி பறக்​கும் ரயில் சேவை 2 ஆண்​டு​களில் படிப்​படி​யாக மெட்​ரோ​விடம் மாற்​றப்​படும். இந்த மாதம் அல்​லது அடுத்த மாதம் தொடக்​கத்​தில் புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் கையெழுத்​திடப்​படும்.

முதலில் ரயில் நிலை​யங்​களை மேம்​படுத்​தும் பணி​கள் மேற்​கொள்​ளப்​படும். அதைத் தொடர்ந்து ரயில் பெட்​டிகளை மாற்​று​வது என பணி​கள் மேற்​கொள்​ளப்​படும். முழு​மை​யாகப் பணி​கள் முடிய இரண்​டரை ஆண்​டு​களாகும். அது​வரை புறநகர் ரயில்​கள் வழக்​கம்​போல இயங்​கும். மதுரை, கோவை​யில் நிலம் எடுப்பு பணி​களுக்கு 2 ஆண்​டு​கள் ஆகும். இப்​போது நிலத்தை அடையாளம் காணும் பணி, அரசின் ஒப்​புதலைப் பெறு​வது ஆகிய பணி​களைத் தொடங்​கி​விட்​டோம்.

மத்​திய அரசின் ஒப்​புதல் கிடைக்க கால​தாமதம் ஏதும் இல்​லை; வழக்​க​மான காலம்​தான் எடுக்​கிறது. 2-ம் கட்ட மெட்ரோ பணி​யில் ஒரு வழித்​தடம் டிசம்​பர் மாதம் பொது​மக்​களின் பயன்​பாட்​டுக்கு கொண்டு வரப்​படும். அடுத்​தடுத்த 6 மாதங்​களில் அடுத்​தடுத்த வழித்​தடங்​களை பயன்​பாட்​டுக்​குக் கொண்டு வரு​வோம். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

இந்​நிகழ்ச்​சி​யில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அமைப்​பு​கள் மற்​றும் இயக்​கம் இயக்​குநர் மனோஜ் கோயல், தலைமை ஆலோ​சகர் கோபி​நாத் மல்​லையா (இயக்​கம் மற்​றும் பராமரிப்​பு). தொழில்​நுட்ப ஆலோ​சகர் மனோகரன், ஊபர் நிறு​வனத்​தின் மூத்த இயக்​குநர் மணி​கண்​டன் தங்​கரத்​தினம், ஒஎன்​டிசி நிறு​வனத்​தின் துணைத் தலை​வர் நிதின் நாயர், சென்னை மெட்ரோ ரயில் நிறு​வனம் மற்​றும் ஊபர் நிறு​வனத்​தின்​ உயர்​ அலு​வலர்​கள்​ மற்​றும்​ பணி​யாளர்​கள்​ உடனிருந்​தனர்​.

SCROLL FOR NEXT