சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஆக்கிரமிப்பு செய்து நடத்தப்பட்டு வந்த 570 கடைகள் அகற்றப்பட்டன. அவர்களிடமிருந்து ரூ.30 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் பூ, பழம், காய்கறி ஆகிய 3 வகையான மார்க்கெட்டுகள் இயங்கி வருகின்றன. இந்த மார்க்கெட்டில் சுமார் 3500-க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன. இப்பகுதியில் மார்க்கெட்டுக்கு வருவோர் கொண்டுவரும் வாகனங்களை நிறுத்துவதற்காக இடங்கள் ஒதுக்கப்பட்டுள் ளன.
இந்த பகுதி மற்றும் மார்க்கெட் செல்லும் வழிகளில் பலர் ஆக்கிரமித்து கடைகளை நடத்தி வந்தனர். இது பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதால், ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என்று மார்க்கெட் நிர்வாகக் குழுவின் முதன்மை நிர்வாக அலுவலருக்கு பொதுமக்களிடமிருந்து புகார்கள் வந்தன.
இதைத் தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். ஆக்கிரமிப்பு கடைக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, ஆக்கிரமி்ப்புகளை முழுமையாக அகற்ற முடியவில்லை. இந்நிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மார்க்கெட் முதன்மை நிர்வாக அலுவலக உதவிப் பொறியாளர் ராஜன்பாபு தலைமையிலான ஊழியர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர். இதில் சுமார் 570 ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன.