சென்னை: தமிழர்களின் மண்,மொழி, மானம் காக்க ஓரணியில் இணைய வேண்டியதன் அவசியத்தை தெரிவிக்கும் விதமாக, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் வீடியோ ஒன்றை திமுக வெளியிட்டுள்ளது.
அந்த வீடியோவில் கூறியிருப்பதாவது: இன்றைக்கு நாம் ஓரணியில் திரள வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. ஜிஎஸ்டி என்ற பெயரில் தமிழகத்துக்கு வர வேண்டிய ரூ.20 ஆயிரம் கோடி நிலுவைத் தொகை, இதுவரை மத்திய அரசிடம் இருந்து வழங்கப்படவில்லை. பேரிடர் நிவாரண நிதியும் தரவில்லை. புதிய கல்விக் கொள்கையை ஏற்காததால், கல்வி நிதி, ரூ.2,150 கோடி இன்னும் வந்து சேரவில்லை.
நீட் எனும் கொடிய தேர்வால் மாணவர்கள் அவதிக்குள்ளாகின்றனர். தமிழக மக்களுக்கு எதிரான இது போன்ற அடக்குமுறைகளை நாம் ஓரணியில் திரண்டு தகர்த்து எறிய வேண்டும். கீழடி ஆய்வுக்கு மத்திய அரசு அங்கீகாரம் அளிக்காமல் இழுத்தடிப்பது, தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இரும்பின் தொன்மையை புறக்கணிப்பது, தமிழுக்கு குறைந்த நிதி ஒதுக்குவது என மத்திய அரசின் அடக்குமுறை தொடர்கிறது.
தமிழர் அடையாளமான திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசி இழிவுப்படுத்துவது, மாநில சுயாட்சி, கூட்டாட்சிக்கு எதிராக ஆளுநரை வைத்து அற்ப அரசியல் செய்வது, தமிழர்களை நாகரீகமற்றவர்கள் என நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் ஒருவர் பேசுவது என நமக்கு எதிரான தாக்குதல் தொடர்கிறது.
இதுபோன்ற தாக்குதலால் தமிழர்களின் சுய மரியாதையை சீண்டிப்பார்க்கின்றனர். இனியும் இதை ஏற்க முடியாது. நம் மண் மொழி மானம் காக்க தமிழக மக்கள் ஓரணியில் இணைவோம். பகை கூட்டத்தை வெல்வோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.