கோப்புப்படம் 
தமிழகம்

மடப்புரம் அஜித்குமார் வழக்கில் கைதான காவலர்களை காவலில் எடுக்க சிபிஐ மனு

செய்திப்பிரிவு

மதுரை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் கைதான 5 தனிப்படை காவலர்களை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மதுரை நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் போலீஸார் தாக்கியதில் உயிரிழந்தார். இந்த வழக்கில் தனிப்படை காவலர்கள் பிரபு, கண்ணன், சங்கர மணிகண்டன், ராஜா, ஆனந்த் ஆகியோர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது அஜித்குமார் மரணம் மற்றும் அவர் மீதான திருட்டு வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. திருப்புவனம் நீதிமன்றத்தில் இருந்து அஜித்குமார் வழக்கு மதுரை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது காவல் நீட்டிப்புக்காக தனிப்படை காவலர்கள் 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். 5 பேரின் நீதிமன்ற காவலை ஆக.13-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில், அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக தனிப்படை காவலர்கள் 5 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ முடிவு செய்துள்ளது. இதற்காக 5 பேரையும் சிபிஐ காவலுக்கு அனுப்ப அனுமதி கோரி சிபிஐ தரப்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நாளை (ஆக.5) விசாரணைக்கு வருகிறது.

SCROLL FOR NEXT