தமிழகம்

பாஜக நிர்வாகி அலெக்சிஸ் சுதாகரை கைது செய்து சிறையில் அடைத்த உத்தரவு செல்லாது: ஐகோர்ட்

ஆர்.பாலசரவணக்குமார்

பாஜக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் அலெக்சிஸ் சுதாகர் மீதான 3 வழக்குகளை ரத்து செய்தும், அவரை கைது செய்து சிறையில் அடைத்த உத்தரவுகள் செல்லாது என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞரும், பாஜக வழக்கறிஞர் பிரிவு செயலாளருமான அலெக்சிஸ் சுதாகர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் மாமல்லபுரம் பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது, அங்கு வந்த சீர்காழியை சேர்ந்த பிரபல ரவுடி சத்யாவை போலீஸார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். பதிலுக்கு அவரும் போலீஸாரை நோக்கி சுட்டார்.

சத்யாவுக்கு துப்பாக்கி வழங்கியதாக அலெக்சிஸ் சுதாகரையும் மாமல்லபுரம் போலீஸார் கைது செய்தனர். அதேபோல, ஆள்கடத்தல், பண மோசடி பிரிவில் கோவை குனியமுத்தூர், துடியலூர் போலீஸாரும் அவரை கைது செய்தனர். இதையடுத்து, குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை அறிவுரை குழுமம் ரத்து செய்ததால், ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில், 3 வழக்குகளில் தன்னை கைது செய்து சிறையில் அடைத்த உத்தரவுகளை ரத்து செய்யக் கோரி அலெக்சிஸ் சுதாகர் தனித்தனியாக 3 மனுக்களை தாக்கல் செய்தார். நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு இந்த மனுக்கள் மீதான விசாரணை நடந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி, ”இந்த 3 வழக்குகளிலும் கைதுக்கான காரணங்களை மனுதாரருக்கு தெரிவிக்க வில்லை. அவரது குடும்பத்தினருக்கும் தகவல் கொடுக்கவில்லை. இது உச்ச நீதிமன்ற தீர்ப்புகளுக்கு விரோதமானது” என்று கூறி, அலெக்சிஸ் சுதாகர் மீதான 3 வழக்குகளை ரத்து செய்தும், அவரை கைது செய்து சிறையில் அடைத்த உத்தரவுகள் செல்லாது என அறிவி்த்தும் உத்தரவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT