தமிழகம்

300 அடி உயர செல்போன் கோபுரத்தில் தேசிய கொடியை கட்டிய இளைஞர்: போலீஸார் எச்சரித்து அனுப்பினர்

செய்திப்பிரிவு

300 அடி உயர செல்போன் கோபுரத்தில் ஏறி தேசியக் கொடியை கட்டிய இளைஞரை பிடித்து போலீஸார் எச்சரித்து அனுப்பினர்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை உத்தண்டியில் 300 அடி உயர செல்போன் கோபுரம் ஒன்று உள்ளது. சுதந்திர தினமான வெள்ளிக்கிழமை காலையில் அடையாரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படிக்கும் மாணவர் குமரன் (21) பெரிய தேசியக் கொடியுடன் செல்போன் கோபுரத்தில் ஏறினார். கோபுரத்தின் உச்சிக்கு சென்ற அவர் கொடியை அசைத்தபடி நின்றார். பின்னர் அந்த கொடியை கோபுரத்தின் உச்சியில் கட்டி வைத்தார். மாணவரின் இந்த செயலால் கிழக்கு கடற்கரை சாலையில் பொதுமக்கள் கூட்டம் கூடியது. இதனால் சாலையில் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டது.

கானாத்தூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அந்த மாணவரை கீழே இறங்கும்படி கூறினர். அவரும் சிறிது நேரத்தில் கீழே இறங்க அவரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர். உயிருக்கு ஆபத்தான இதைப்போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்று அவரை போலீஸார் எச்சரித்து அனுப்பினர்.

SCROLL FOR NEXT