கொலையான கவின் (இடது), கொலை வழக்கில் சரணடைந்த சுர்ஜித் (வலது) 
தமிழகம்

கவின் கொலை வழக்கில் கைதான சுர்ஜித்துக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல்

அ.அருள்தாசன்

திருநெல்வேலி: ஐ.டி. ஊழியரான கவின் செல்வகணேஷ் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட சுர்ஜித்தை திருநெல்வேலியில் உள்ள இரண்டாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர் படுத்தினர். நீதிபதி ஹேமா சுர்ஜித்தை 14 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார். தலைமறைவான சுர்ஜித்தின் பெற்றோரான சப் இன்ஸ்பெக்டர் தம்பதியை பாளையங்கோட்டை போலீஸார் தேடி வருகின்றனர்.

இதற்கிடையில் இந்தக் கொலை தொடர்பாக சுர்ஜித் அளித்த வாக்குமூலம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதிரவைக்கும் வாக்குமூலம்: இந்த வழக்கில் கவினை கொலை செய்ததை சுர்ஜித் ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், சம்பவப் பகுதிகளில் இருந்த சிசிடிவி கேமராக்களிலும் கவினை சுர்ஜித் கொலை செய்யும் காட்சிகள் பதிவாகியுள்ளன. இதனையடுத்து பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் சுர்ஜித் மீது கொலை, சாதிய வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அவர் கொடுத்துள்ள ஒப்புதல் வாக்குமூலத்தில், “எனது அக்காவும், கவின் செல்வ கணேஷும் தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிப் பருவத்தில் இருந்தே ஒன்றாகப் படித்தனர். இருவரும் நட்புடன் பழகிவந்த நிலையில், திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.

கவின் பட்டியல் பிரிவைச் சேர்ந்தவர் என்பதால் எனக்கு அதில் உடன்பாடில்லை. இதுகுறித்து பல முறை எனது அக்காவை கண்டித்தேன். கவினையும் அழைத்து எச்சரித்தேன். ஆனால், எனது அக்கா வேலை பார்க்கும் பாளையங்கோட்டை தனியார் சித்த மருத்துவமனைக்கே சென்று அவ்வப்போது அவருடன் கவின் பேசிவந்தர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 27) எனது அக்காவை சந்திக்க சித்த மருத்துவமனைக்கு கவின் வந்ததை அறிந்த நான் அவரைப் பின் தொடர்ந்து சென்று, தனியாக அழைத்து மீண்டும் எச்சரித்தேன். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் கொலை செய்து விட்டேன்" என்று கூறியுள்ளார்.

நடந்தது என்ன? - தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் கவின் (27). இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்த கவின், உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த தனது உறவினரை அழைத்துக் கொண்டு பாளையங்கோட்டை கேடிசி நகர் அஷ்டலட்சுமி நகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வந்தார்.

உறவினருடன் மருத்துவமனை முன்பு நின்று கொண்டிருந்தபோது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் கவினை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர். இதில் பலத்த காயமடைந்த கவின், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பாளையங்கோட்டை போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

SCROLL FOR NEXT