இடம்: திண்டுக்கல் திருச்சி சாலை கல்லறை தோட்டம் | படம்: நா.தங்கரத்தினம் 
தமிழகம்

சம வேலைக்கு சம ஊதியம் கோரி காலவரையற்ற போராட்டம்: இடைநிலை ஆசிரியர்கள் எச்சரிக்கை

சி.பிரதாப்

சென்னை: சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கையை முன்வைத்து தமிழகம் முழுவதும் இடைநிலை ஆசிரியர்களின் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், “தேர்தல் அறிக்கையில் கூறியபடி சம வேலைக்கு சம சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் வரும் செப்டம்பர் மாதம் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்” என்று அவர் எச்சரித்துள்ளனர்.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 2009 மே 31-ம் தேதி நியமிக்கப்பட்ட அரசுப் பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு ஊதியமும், அதே ஆண்டு ஜூன் 1-ல் பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மற்றொரு ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் வித்தியாசத்தில் அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170 குறைந்துள்ளது. இதனால், சுமார் 20,000 ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த முரண்பாட்டை களைந்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி இடைநிலை ஆசிரியர்கள் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், தமிழக அரசு இந்த கோரிக்கையை இதுவரை ஏற்கவில்லை.

இந்நிலையில், சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கை முன்வைத்து இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கம்(எஸ்எஸ்டிஏ) சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது. சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமான ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

இதுகுறித்து எஸ்எஸ்டிஏ அமைப்பின் பொதுச் செயலாளர் ஜே.ராபர்ட் கூறியது: “தமிழகத்தில் 2009-ல் திமுக ஆட்சியில் ஒரே பதவிக்கு இரு வேறு அடிப்படை சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டது. இந்தச் சம்பள முரண்பாடு கடந்த 15 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்த முரண்பாட்டை களையக் கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தினோம். திமுக ஆட்சிக்கு வந்தால் சம்பள முரண்பாடுகள் களையப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தலின்போது வாக்குறுதி அளித்தார். ஆனால், திமுக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகளாகியும் இதுவரை இந்தப் பிரச்னைக்கு முடிவு எட்டப்படவில்லை.

நீண்ட போராட்டத்துக்கு பிறகு இது தொடர்பாக ஆய்வு செய்ய 2023 ஜனவரி 1-ல் 3 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்தது. அந்தக் குழு என்ன செய்கிறது என்றே தெரியவில்லை. பணி நியமனம் பெற்று 16 ஆண்டுகளாக கடைநிலை ஊழியர்கள் சம்பளத்துடன் பொருளாதார நெருக்கடியால் பணிபுரித்து வருகிறோம். தேர்தல் அறிக்கையில் கூறியபடி சம வேலைக்கு சம சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் வரும் செப்டம்பர் மாதம் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்” என்று அவர் கூறினார்.

SCROLL FOR NEXT