ஒரு காலத்தில் சிறைக்கு சென்றவர்கள் அரசியல் கட்சித் தலைவர் ஆனார்கள். இப்போது சிறைக்குப் போக வேண்டியவர்கள் தலைவர்களாக இருக்கிறார்கள் என கவிக்கோ அப்துல் ரகுமான் பேசினார்.
மக்கள் சிந்தனை பேரவை சார்பில், ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் புத்தகத் திருவிழா நடந்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை மாலை நடந்த சிந்தனை அரங்கில், தட்டினால் கதவு திறக்குமா? என்ற தலைப்பில் கவிக்கோ அப்துல் ரகுமான் பேசியதாவது:
எதுவும் தேடினால் தான் கிடைக்கும் என்பது இறைவிதி. சிலரை எப்போதும் துன்பம் தொடர்கிறது. இந்த துன்பம் தொடர்ந்து வர காரணம், சரியான கதவு எது என்பதை அறியாமல் இருப்பதுதான். கும்பகோணம் தீ விபத்தில் குழந்தைகளின் இதயங்கள் தீயில் கருகின. 10 ஆண்டுகள் கழித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதால், அந்த குழந்தைகளின் பெற்றவர்களின் இதயங்கள் இப்போது தீக்கிரையாகிவிட்டன.
திரையரங்குகள் நவீன கோயில்களாக மாறிவருவது வேதனை அளிக்கிறது. இப்போதெல்லாம் திரையரங்குகளில் கட்–அவுட் தெய்வங்களுக்குதான் இளைஞர்கள் அபிஷேகம், ஆராதனை செய்கின்றனர். இது எங்கே போய் முடியும் என்று தெரியவில்லை. ஒரு காலத்தில் சிறைக்கு சென்றவர்கள் அரசியல் கட்சித் தலைவர் ஆனார்கள். இப்போது சிறைக்குப் போக வேண்டியவர்கள் தலைவர்களாக இருக்கிறார்கள்.
இவ்வாறு, அவர் பேசினார்.
முன்னதாக ஆலய கதவு என்ற தலைப்பில் கவிஞர் நந்தலாலாவும், கல்வி நிலைய கதவு தலைப்பில் கவிஞர் நெல்லை ஜெயந்தாவும், நீதிமன்ற கதவு தலைப்பில் கவிஞர் கபிலனும், அமைச்சர் வீட்டு கதவு தலைப்பில் பழனி பாரதியும் கவி பாடினர்.