பனகல் பூங்கா - கோடம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை பணியில் ஈடுபட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரமான ‘பீகாக்', கோடம்பாக்கம் நிலையத்தை நேற்று வந்தடைந்தது. 
தமிழகம்

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்: பனகல் பூங்கா - கோடம்பாக்கம் வரை சுரங்க பாதை பணி நிறைவு

செய்திப்பிரிவு

சென்னை: இரண்​டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்​டத்​தில், கலங்​கரை விளக்​கம் - பூந்​தமல்லி வரையி​லான 4-வது வழித் தடத்​தில் ஒரு பகு​தி​யாக, பனகல் பூங்கா - கோடம்​பாக்​கம் வரை மெட்ரோ ரயில் சுரங்​கப்​பாதை பணி நிறைவடைந்​தது. இப்​பணி​யில் ஈடுபட்ட சுரங்​கம் தோண்​டும் இயந்​திர​மான “பீ​காக்” கோடம்​பாக்​கம் நிலை​யத்தை வெற்​றிகர​மாக வந்​தடைந்​தது.

சென்​னை​யில், 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்​டம், 116.1 கி.மீ. தொலை​வில் 3 வழித் தடங்​களில் செயல்​படுத்​தப்​படு​கிறது. இவற்​றில், கலங்​கரை விளக்​கம்- பூந்​தமல்லி பைபாஸ் வரையி​லான 4-வது வழித் தடம் (26.1 கி.மீ.) முக்​கிய வழித்​தட​மாக உள்​ளது. இத்தடத்தில், கலங்​கரை விளக்​கம் - கோடம்​பாக்​கம் மேம்​பாலம் வரை சுரங்​கப் பாதை​யாக​வும், கோடம்​பாக்​கம் பவர்​ஹவுஸ் முதல் பூந்​தமல்லி பைபாஸ் வரை உயர்​மட்​டப் பாதை​யாக​வும் அமை​கிறது.

தற்​போது, பல்​வேறு இடங்​களில் சுரங்​கப் பாதை, உயர்​மட்​டப் பாதை பணி​கள் தீவிர​மாக நடை​பெறுகின்​றன. இந்த வழித்தடத்தில், கலங்​கரை விளக்​கம் நிலை​யத்​திலிருந்து கோடம்​பாக்​கம் மேம்​பாலம் வரையி​லான 10.03 கி.மீ. தொலை​வுக்கு சுரங்கப் பாதை பணி நடை​பெறுகிறது. இதன் கட்​டு​மானப் பணி​களை ஐடிடி சிமென்​டேஷன் இந்​தியா நிறு​வனம் மேற்​கொள்கிறது. இதற்​காக, 4 சுரங்​கம் தோண்​டும் இயந்​திரங்​கள் பயன்​படுத்​தப்​படு​கின்​றன.

பனகல் பூங்கா - கோடம்​பாக்​கம் இடையே 2,047 மீட்​டர் நீளத்​துக்கு சுரங்​கப் பாதை அமைக்​கும் பணி​யில், பீகாக் (மயில்), பெலிகான் (நாரை) என பெயரிடப்​பட்​டுள்ள, 2 சுரங்​கம் தோண்​டும் இயந்​திரங்​கள் பயன்​படுத்​தப்​பட்​டன. இந்த இயந்​திரங்​கள் அடுத்​தடுத்து கோடம்​பாக்​கம் நிலை​யத்தை நெருங்கி வந்​தன.

இந்​நிலை​யில், பனகல்​பூங்கா - கோடம்​பாக்​கம் நிலை​யம் வரை, பீகாக் என்ற சுரங்​கம் தோண்​டும் இயந்​திரம் நேற்று பணியை வெற்​றிகர​மாக நிறைவு செய்​தது. இந்த இயந்​திரம், ஆற்​காடு சாலை​யில் மீனாட்சி கல்​லூரிக்கு அரு​கில் கோடம்​பாக்​கம் நிலையத்தை நேற்று வந்​தடைந்​தது.

இந்​நிகழ்​வை, சென்னை மெட்ரோ ரயில் நிறு​வனத்​தின் திட்ட இயக்​குநர் தி.அர்ச்​சுனன், ஐடிடி சிமென்​டேஷன் நிறு​வனத்​தின் மேலாண்மை இயக்​குநர் ஜெயந்த பாசு, சென்னை மெட்ரோ ரயில் நிறு​வனத்​தின் தலைமை பொது மேலா​ளர்​கள் ரேகா பிர​காஷ் (திட்​ட​மிடல் மற்​றும் வடிவ​மைப்​பு), எஸ்​.அசோக் குமார் (வழித்​தடம் மற்​றும் உயர்​மட்ட கட்​டு​மானம்), தலைமை ஆலோ​சகர் ராஜீவ் கே.ஸ்ரீவஸ்​தவா (சுற்​றுச்​சூழல்), பொது மேலா​ளர் ஆர். ரங்​க​நாதன் (கட்​டு​மானம்) உள்பட பலர் கலந்து கொண்டு பார்​வை​யிட்டனர்.

இது குறித்​து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி​கள் கூறிய​தாவது: இரண்​டாம் கட்​டத்​தில் பனகல் பூங்கா மற்​றும் கோடம்​பாக்​கம் இடையி​லான இந்த சுரங்​கப் பாதை பிரிவு மிக​வும் நீள​மான பிரி​வாகும். இதில் சுரங்​கம் தோண்​டும் இயந்​திரம் பீகாக் (மயில்) 190 கட்​டிடங்​கள் வழி​யாக செல்ல வேண்​டி​யிருந்​தது. அவற்​றில், பெரும்​பாலும் குடி​யிருப்பு கட்​டிடங்​கள். அவற்​றில், 50-க்​கும் மேற்​பட்ட கட்​டிடங்​கள் பழைய கட்​டிடங்​கள்.

மேலும், இந்த சுரங்​கப் பாதை இரண்டு தேவால​யங்​கள் வழி​யாக​வும், கோடம்​பாக்​கம் மேம்​பாலத்​துக்கு கீழே​யும் சென்​றது. சவால்கள் இருந்த போதி​லும், பொது​மக்​களுக்​கும், போக்​கு​வரத்​துக்​கும் எவ்​வித இடையூறும் இல்​லாமல் சுரங்​கப் பாதை பணியை நிறைவு செய்​ததுள்​ளது. இவ்​வாறு அவர்​கள் கூறினர்​.

SCROLL FOR NEXT