தமிழகம்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் விண்ணப்பங்களை திருத்தி சமர்ப்பிக்க மருத்துவக் கல்வி இயக்குநரகம் கூடுதல் அவகாசம் 

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவ படிப்புக்கான விண்ணப்பங்களை திருத்தி சமர்ப்பிப்பதற்கான கால அவகாசத்தை இன்று (ஜூலை 23) மாலை 5 மணி வரை நீட்டித்துள்ளதாக மருத்துவக் கல்வி இயக்குநரகம் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

திருவள்ளூரைச் சேர்ந்த சாதனா என்ற மாணவி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்த வழக்கில், “மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளேன். ஆன்லைன் மூலம் விண்ணப்பித்ததில் எனது விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டது. ஆனால் ஜூலை 15-ம் தேதி மருத்துவக் கல்வி இயக்ககம் வெளியிட்ட அறிவிப்பில் என்னோடு சேர்த்து 1800 பேரின் விண்ணப்பங்களில் குறைபாடுகள் உள்ளது எனக் கூறி நிராகரிக்கப்பட்டு விட்டது.

குறைகளை நிவர்த்தி செய்து விண்ணப்பிக்க கால அவகாசம் 18-ம் தேதிவரை வழங்கப்பட்டு அதற்கான போர்டல் மூடப்பட்டுவிட்டது. விண்ணப்பங்களை திருத்தி சமர்ப்பிக்க மேலும் கால அவகாசம் வழங்க வேண்டும்,” என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி சி.குமரப்பன் முன்பு விசாரணைக்கு வந்தது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம். வேல்முருகன், இதனால் 1800 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எனவே கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார் ..

இதையடுத்து மருத்துவக் கல்வி இயக்குநரகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இன்று மாலை 5 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT