தமிழகம்

செந்தில் பாலாஜி வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க கோரிய மனு: அமலாக்கத் துறை பதிலளிக்க உத்தரவு

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கு விசாரணையை தள்ளிவைக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் மற்றும் முன்னாள் உதவியாளர் பி.சண்முகம் உள்ளிட்ட 13 பேருக்கு எதிராக அமலாக்கத் துறை தாக்கல் செய்த சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

இந்த வழக்கு முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் உள்ளிட்ட அனைவரும் நேரில் ஆஜராகினர். வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட எம்.கார்த்திகேயன் என்பவர், இந்த வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், எம்.பி - எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வேலை வாங்கி தருவதாகக் கூறி மோசடி வழக்கு விசாரணை முடியும் வரை, சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் எனக் கோரியிருந்தார். இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஜூலை 28-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

SCROLL FOR NEXT