தமிழகம்

சீனியர் ஐ.பெரியசாமிக்குப் பதில் சிஷ்யர் அர.சக்கரபாணி! - திண்டுக்கல் மாவட்டத்துக்கு திமுக போடும் கணக்கு

பி.டி.ரவிச்சந்திரன்

திண்டுக்கல் மாவட்டத்தில் மூத்த அமைச்சர் ஐ.பெரியசாமி இருக்க, அவரை ஓரங்கட்டிவிட்டு ஜூனியர் அமைச்சர் அர.சக்கரபாணியை தேர்தலுக்கான மண்டலப் பொறுப்பாளராக களத்தில் இறக்கி விட்டிருக்கிறது திமுக தலைமை. இதற்கு, வயோதிகத்தைக் காரணமாகச் சொன்னாலும் இதனால் ஐ.பி ஆதரவு வட்டாரம் சற்று திகைத்தே நிற்கிறது.

திமுக துணைப் பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஐ.பெரியசாமி தென் மாவட்ட திமுக-வில் அசைக்க முடியாத சக்தியாக இருப்பவர். திண்டுக்கல் ஆத்தூர் தொகுதியில் தொடர்ந்து நான்காவது முறையாக வென்றிருக்கும் இவர், கடந்த முறை சுமார் 1 லட்சத்து 35 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்று தனது தனித்த செல்வாக்கைக் காட்டினார். அப்படி இருந்தும், அவருக்கு பழையபடி வருவாய்த் துறையைக் கொடுக்காமல், கூட்டுறவுத் துறைக்கு அமைச்சராக்கியது திமுக தலைமை. அப்போது, “செல்லூர் ராஜு வைத்திருந்த துறையை அண்ணனுக்கு ஒதுக்கி இருக்கிறார்கள்.

அவரும் இவரும் ஒண்ணா?” என்று ஐ.பி ஆதரவாளர்கள் விவாதமே நடத்தினார்கள். இன்னும் சிலரோ, “இதை ஐ.பி ஏற்றுக்கொள்வாரா?” என்றும் சந்தேகம் கிளப்பினார்கள். ஆனால், எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார் ஐ.பி. இந்த விஷயத்தில் உள்ளுக்குள் அவருக்கு வருத்தம் இருப்பதைப் புரிந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின், அமைச்சரவை மாற்றத்தின் போது கூட்டுறவுத் துறைக்குப் பதிலாக ஊரகவளர்ச்சித் துறையை ஐ.பி-க்கு ஒதுக்கினார்.

திண்டுக்கல் மாவட்டத்தின் இன்னொரு அமைச்சர் அர.சக்கரபாணி. ஒட்டன்சத்திரம் தொகுதியில் தொடர்ச்சியாக 6 முறை வென்று சாதனை படைத்திருக்கும் சக்கரபாணிக்கு ஐ.பி தான் அரசியல் குருநாதர். திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 7 சட்டமன்றத் தொகுதிகள். இதில், ஜெயலலிதா இருந்தபோது 2016 தேர்தலில் 3 தொகுதிகளை அதிமுக வென்றது.

இபிஎஸ் தலைமையேற்று நடத்திய 2021 தேர்தலிலும் 3 தொகுதிகளை தக்கவைத்தது அதிமுக. அந்தத் தேர்தலில் திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து 6 தொகுதிகளை எதிர்பார்த்த திமுக தலைமைக்கு இது ஏமாற்றத்தை அளித்தது. இப்படியான சூழலில் இம்முறை கூடுதல் தொகுதிகளை வென்றெடுக்க வசதியாக சக்கரபாணியை களத்துக்குக் கொண்டு வந்திருக்கிறது.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய மாவட்ட திமுக-வினர், “ஐ.பி-க்கு இப்போது 72 வயதாகிறது. அவரும் அவரது மகன் செந்தில்குமாரும் இப்போது எம்எல்ஏ-க்களாக இருக்கிறார்கள். 2026 தேர்தல் திமுக-வுக்கு சவாலான தேர்தலாகத்தான் இருக்கும். அப்படி இருக்கையில், ஐ.பி-யை வைத்துக் கொண்டு தேர்தல் பணிகளை திறம்பட கவனிக்க முடியாது என்பதால் அவருக்குப் பதிலாக சக்கரபாணியை களத்தில் இறக்கி இருக்கிறது தலைமை. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 தொகுதிகள், திருப்பூர் மாவட்டத்தில் 4 தொகுதிகள் என மொத்தம் 17 தொகுதிகளுக்கு சக்கரபாணி தான் மண்டலப் பொறுப்பாளர். இம்முறை ஜெயலலிதா பாணியில் சாமானியர்களுக்கே திமுக சீட் கொடுக்கப் போறதா சொல்றாங்க.

அந்த விதத்தில் இம்முறை ஐ.பி குடும்பத்தில் யாராவது ஒருத்தருக்குத்தான் சீட் இருக்கும்னும் சொல்றாங்க. மண்டலப் பொறுப்பாளராக அறிவிக்கப்பட்டதில் இருந்தே திண்டுக்கல் மாவட்டத்தில் தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகள் கூட்டங்களைப் போட்டு தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை முடுக்கிவிட்டு வருகிறார் சக்கரபாணி.

ஒட்டன்சத்திரத்தில் தொடர் வெற்றிகளைக் குவித்து வரும் சக்கரபாணி அந்த ஃபார்முலாவை மற்ற தொகுதிகளிலும் பயன்படுத்தி வெற்றி இலக்கை உயர்த்துவார் என நம்பித்தான் தலைமை அவருக்கு இந்தப் பொறுப்பை வழங்கி இருக்கிறது. தன்னை ஒதுக்கிவிட்டு சக்கரபாணிக்கு பொறுப்பை வழங்கியதில் ஐ.பி-க்கு வருத்தம் இருக்கவே செய்யும். இருந்தாலும் பொறுப்புக்கு வந்திருப்பவர் தனது கையை மீறிப் போகாத சிஷ்ய கோடி என்பதால் அவர் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருக்கிறார்” என்றார்கள்.

குருநாதரால் சாதிக்க முடியாததை சிஷ்யப் பிள்ளையிடம் கொடுத்து சாதித்துவிடலாம் என கணக்குப் போடுகிறது திமுக தலைமை. சிஷ்யர் சாதிக்கிறாரா என்று பார்க்கலாம்!

SCROLL FOR NEXT