தமிழகம்

வேளாண் அதிகாரிகளுக்கு எதிராக பெண் அதிகாரி தொடர்ந்த அவமதிப்பு வழக்கு - பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

செய்திப்பிரிவு

சக அதிகாரிகளுக்கு எதிராக பாலியல் புகார் அளித்த பெண் அதிகாரிக்கு சார்ஜ் மெமோ வழங்கிய நிலையில், அந்த அதிகாரி மீதான ஒழுங்கு நடவடிக்கை விசாரணைக்கு உயர் நீதிமன்றம் பிறப்பித்த தடையை மீறி அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக பெண் அதிகாரி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில், தமிழக வேளாண் துறை வணிக பிரிவு ஆணையர், காஞ்சிபுரம் துணை இயக்குநர் ஆகியோர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரம் வேளாண் வர்த்தக பிரிவு அதிகாரியாக பணியாற்றும் பெண் அதிகாரி ஒருவர், தன்னை காஞ்சிபுரத்தில் பணியாற்றும் உதவி வேளாண் அதிகாரியும், துணை இயக்குநரும் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கடந்த 2022-ம் ஆண்டு புகார் அளித்திருந்தார். அந்த புகார் மீது உரிய உள் விசாரணைக்குழு அமைத்து விசாரிக்கவில்லை எனக்கூறி அந்த பெண் அதிகாரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

பின்னர் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் உள்விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. இந்நிலையில் பாலியல் புகார் அளித்த பெண் அதிகாரி அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகக் கூறி அவருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் வகையில் சார்ஜ் - மெமோ பிறப்பிக்கப்பட்டது. மேலும் அவர் காஞ்சிபுரத்தில் இருந்து சென்னைக்கு இடமாறுதல் செய்யப்பட்டார்.

இதை எதிர்த்து அந்த அதிகாரி தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், பாலியல் புகார் அளித்த பெண் அதிகாரி மீது துறை ரீதியிலான விசாரணை நடத்த இடைக்காலத் தடை விதித்திருந்தது. ஆனால் உயர் நீதிமன்றத்தின் இந்த தடையுத்தரவை மீறி தனக்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கை தொடர்பான விசாரணையை அதிகாரிகள் தொடர்ந்து வருவதாகக் கூறி அந்த பெண் அதிகாரி உயர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன், இந்த வழக்கில் வேளாண் வணிக பிரிவு ஆணையரும், வேளாண் துணை இயக்குநரும் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் ஆக.4-க்கு தள்ளி வைத்துள்ளார்.

SCROLL FOR NEXT