கோப்புப் படம்

 
தமிழகம்

137 கிலோ மெத்தம்பெட்டமைன் விவகாரம்: மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் மீண்டும் சோதனை

செய்திப்பிரிவு

நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே 137 கிலோ போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில், அங்குள்ள ஒரு குட்டையில் இருந்த தண்ணீரை இறைத்து மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் நேற்று சோதனை நடத்தினர்.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ள கீழப்பிடாகை சிந்தாமணியை சேர்ந்தவர் வழக்கறிஞர் பூபாலன் (26). தவெக நிர்வாகியாக இருந்த இவரது வீட்டிலும், இவரது நண்பர்கள் வீட்டிலும் மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் கடந்த மாதம் 16-ம் தேதி சோதனை நடத்தி, 137 கிலோ மெத்தம்பெட்டமைன் என்ற உயர் ரக போதைப் பொருளை பறிமுதல் செய்து, 4 பேரை கைது செய்தனர்.

தற்போது அவர்கள் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கு தொடர்பாக விசாரித்து வரும் திருச்சி மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர், நேற்று திடீரென கீழப்பிடாகை சிந்தாமணிக்கு வந்து அங்குள்ள ஒரு குட்டையில் 2 மோட்டார் பம்புசெட்களை வைத்து தண்ணீரை இறைத்து, குளத்தில் இறங்கி ஏதாவது பொருட்கள் உள்ளதா என தீவிரமாக தேடினர். ஆனால், எதுவும் கைப்பற்றப்படவில்லை. இதையடுத்து சோதனையை முடித்துக்கொண்டு மாலையில் அங்கிருந்து கிளம்பினர்.

பூபாலன், தான் பயன்படுத்திய ஒரு செல்போனை இந்த குட்டையில் தூக்கி வீசியதாக விசாரணையின்போது தெரிவித்ததன் பேரில், மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் இந்த சோதனையை மேற்கொண்டதாக தெரிகிறது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT