சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் | கோப்புப் படம் 
தமிழகம்

நீதித் துறையில் ஏராளமான பெண் நீதிபதிகள்: தமிழகத்துக்கு தலைமை நீதிபதி ஸ்ரீராம் பாராட்டு

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: ஏராளமான பெண்கள் வழக்கறிஞர்களாக பதிவு செய்வதுடன், நீதித் துறையிலும் ஏராளமான பெண்கள் நீதிபதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்காக தமிழகத்துக்கு தலைமை நீதிபதி ஸ்ரீராம் பாராட்டு தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்துக்கு பணிமாற்றம் செய்யப்பட்டுள்ள சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே ஆர் ஸ்ரீராமுக்கு உயர் நீதிமன்றத்தின் சார்பில் வழியனுப்பு விழா நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பிரிவு உபசார உரை நிகழ்த்திய தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி எஸ்.ராமன், “மும்பை உயர் நீதிமன்றத்தில் இருந்து இதுவரை ஐந்து நீதிபதிகள் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளாக பதவி வகித்துள்ளனர்” என குறிப்பிட்டார்.

பின்னர் ஏற்புரையாற்றிய தலைமை நீதிபதி ஸ்ரீராம், ”புகழ்மிக்க சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி வகித்ததில் பெருமை அடைகிறேன். சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒன்பது மாத பதவிக் காலத்தில் அதிகளவில் கற்றுக் கொண்டேன். முழு திருப்தியுடன் விடைபெறுகிறேன்” என்று குறிப்பிட்டார்.

மேலும், “சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏராளமான பெண் வழக்கறிஞர்கள் ஆஜராகின்றனர். அதேபோல் ஏராளமான பெண்கள் வழக்கறிஞர்களாக பதிவு செய்கின்றனர். தமிழக நீதித் துறையிலும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 213 நீதிபதிகளில் 130 நீதிபதிகள் பெண்கள். இதற்கு மாநிலத்தை பாராட்டுகிறேன்” என்று கூறி, ‘கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக’ என்ற குறளையும் குறிப்பிட்டுப் பேசினார்.

SCROLL FOR NEXT