தமிழகம்

புஸ்ஸி ஆனந்துக்கு புதுச்சேரி முதல்வர் நேரில் பிறந்தநாள் வாழ்த்து: தடையை மீறி தவெக பேனர்

செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: புஸ்ஸி ஆனந்த் பிறந்தநாளையொட்டி அவரது வீட்டுக்கு நேரில் சென்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வாழ்த்து தெரிவித்தார். மேலும், தடையை மீறி நகரெங்கும் தமிழக தவெக நிர்வாகிகள் பேனர்கள் வைத்திருந்தனர்.

தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு இன்று பிறந்தநாள். புஸ்ஸி ஆனந்த் புதுவை மாநிலத்தை சேர்ந்தவர். அவரின் வீடு சின்னமணி கூண்டு அருகே உள்ளது. பிறந்த நாளை கொண்டாட புஸ்சி ஆனந்த் நேற்று இரவு புதுவை வந்திருந்தார். இன்று காலை அவர் புதுவை சின்னசுப்புராயப்பிள்ளை வீதியில் உள்ள அங்காளம்மன் கோயிலில் தனது குடும்பத்தினருடன் சாமி கும்பிட்டார்.

தவெக தலைவர் நடிகர் விஜய் போன் மூலம் புஸ்சி ஆனந்த்துக்கு வாழ்த்து தெரிவித்தார். அவரது வீட்டுக்கு புதுவை முதல்வர் ரங்கசாமி நேரில் சென்று, புஸ்சி ஆனந்த் நெற்றியில் திருநீறு பூசி ஆசிர்வதித்து வாழ்த்து தெரிவித்தார். இதேபோல் புதுவை அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அரசியல் கட்சித் தலைவர்களும் புஸ்ஸி ஆனந்துக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

புஸ்சி ஆனந்த்துக்கு வாழ்த்து தெரிவிக்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் வந்திருந்த தவெக நிர்வாகிகள், தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இதற்காக வேன்கள், பஸ்கள், கார்களில் வந்து புதுவையில் குவிந்திருந்தனர். இதனால் அம்பேத்கர் சாலை, உப்பளம் துறைமுக சாலையில் பிற மாநில, மாவட்ட வாகனங்கள் அதிகளவில் வந்திருந்தன.

பலரும் வாத்தியங்கள் முழங்க, ஆட்டம், பாட்டத்துடன் வந்து புஸ்ஸி ஆனந்துக்கு வாழ்த்து தெரிவித்தனர். அவர்கள் கொண்டு வந்திருந்த கேக்கை வெட்டி புஸ்சி ஆனந்த் தனது பிறந்தநாளை கொண்டாடினர். புதுச்சேரியில் பேனர் தடை சட்டம் இருந்தும் அதை மீறி நகரெங்கும் தமிழக நிர்வாகிகள் புதுச்சேரி முழுக்க பேனர்களை வைத்திருந்தனர்.

SCROLL FOR NEXT