தமிழகம்

தவெக 2-வது மாநில மாநாடு பந்தல்கால் நடும் விழா: மதுரையில் குவிந்த தொண்டர்கள்!

என்.சன்னாசி

மதுரை: மதுரையில் நடைபெறவுள்ள தவெக 2-வது மாநில மாநாட்டுக்கான பந்தல்கால் நடும் விழா சிறப்பு பூஜைகளுடன் இன்று (ஜூலை 16) காலை 5 மணிக்கு அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமையில் நடந்தது.

மாநாட்டுக்கான மனு ஏற்பு: இதன்பின், மாநில செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள் சர்வேயர் காலனி பகுதியிலுள்ள மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சென்றார். மாநாட்டிற்கான அனுமதி, கட்சி தலைவர் பங்கேற்பது, பாதுகாப்பு, வாகன பார்க்கிங் வசதி போன்ற விவரங்கள் அடங்கிய மனுவை காவல் கண்காணிப்பாளர் அரவிந்திடம் பொதுச்செயலாளர் வழங்கினார். உடன் மாவட்ட செயலாளர்கள் மற்றும் 10 நிர்வாகிகள் பங்கேற்றனர். மனுவை ஏற்றதற்கான ரசீது வழங்கப்பட்டது. அதில் புகார் மனுக்கான ரசீது என, குறிப்பிட்டு இருந்தது. மாநாடுக்கான அனுமதி மனு என, மாற்றி வழங்க பொதுச்செயலாளர் கேட்டுக் கொண்டார். இதன்பின், மாநாட்டுக்கான அனுமதி மனு ஏற்பு என, திருத்தி வழங்கப்பட்டது. மாநாட்டுக்கான மனு வழங்குவதையொட்டி மதுரை எஸ்பி அலுவலகத்தில் தொண்டர்கள் குவிந்தனர்.

‘இது வெற்றி மாநாடாக இருக்கும்’ .. இதற்கிடையில் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மதுரை மாவட்டம், பாரபத்தி பகுதியில் தவெகவின் இரண்டாவது மாநில மாநாட்டை ஆகஸ்ட் 25-ம் தேதி நடத்துவதாக எங்களது கட்சித் தலைவர் அறிவித்திருக்கிறார். இது தொடர்பாக தலைவரின் அறிவுறுத்தலின்படி அனுமதி, பாதுகாப்பு கேட்டு காவல்துறையிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. மனுவை எஸ்பி ஏற்றுக்கொண்டார்.

ஏற்கெனவே நடத்திய மாநாட்டிற்கான விதிமுறைகளை பின்பற்றி பொதுமக்களுக்கு எவ்வித இடையூறுமின்றி மாநாடு சிறப்பாக நடத்துவோம். கண்டிப்பாக இது வெற்றி மாநாடாக இருக்கும். தலைவர் எது தொட்டாலும் வெற்றியாகத் தான் இருக்கும். முதல் மாநாட்டில் பங்கேற்றவர்களைவிட 2-வது மாநாட்டில் அதிக அளவில் பங்கேற்பர்.

மாநாடு மற்றும் பார்க்கிங் வசதிக்கென 506 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டுத் திடல் அமைக்கப்படும். தென்மாவட்டங்கள் மட்டுமின்றி தமிழ்நாடே தமிழக வெற்றிக் கழகத்திற்கு சாதகமாகவே இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT