தமிழகம்

அமெரிக்கா செல்ல அனுமதி கோரி செந்தில் பாலாஜியின் சகோதரர் மனு: அமலாக்கத் துறைக்கு ஐகோர்ட் உத்தரவு

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: மருத்துவ சிகிச்சைக்கு அமெரிக்கா செல்ல அனுமதி கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் தாக்கல் செய்த மனு குறித்து அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதய சிகிச்சை மேற்கொள்ள அமெரிக்கா செல்ல அனுமதி கோரி அசோக்குமார் தாக்கல் செய்த மனுவை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. இதனை எதிர்த்து அசோக்குமார் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அசோக்குமார் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன், பதினைந்து நாட்களுக்கு மட்டும் அனுமதி அளித்தால் போதுமெனவும், நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாகவும் கூறினார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் , நீங்களே நினைத்தாலும் நீண்ட நாட்கள் இருக்க முடியாது. ட்ரம்ப் உங்களை வெளியேற்றி விடுவார் என நகைச்சுவையாக குறிப்பிட்டனர். இதனையடுத்து, அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ரஜ்னீஷ் பத்தியால், மனு குறித்து பதிலளிக்க அவகாசம் வேண்டும் என்றார்.

ஒருவேளை அமெரிக்கா செல்ல அனுமதியளித்தால் பாஸ்போர்ட்டை அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தில் தாக்கல் செய்ய நேரிடும் என நீதிபதிகள் தெரிவித்தனர். இதனையடுத்து, பயணத்திட்டம் உள்ளிட்ட விவரங்களை தாக்கல் செய்ய அசோக்குமார் தரப்புக்கும், மனு குறித்து பதிலளிக்க அமலாக்கத்துறைக்கும் உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை ஜூலை 22ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

SCROLL FOR NEXT