திருவக்கரை வக்கரகாளியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி. 
தமிழகம்

திருவக்கரை வக்கரகாளியம்மன் கோயிலில் எடப்பாடி பழனிசாமி நள்ளிரவில் தரிசனம்!

செய்திப்பிரிவு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் 2 நாள் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, திருவக்கரை வக்கரகாளியம்மன் கோயிலில் நேற்று முன்தினம் நள்ளிரவு சுவாமி தரிசனம் செய்தார். ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் பிரச்சார பயணத்தை, அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி மேற்கொண்டுள்ளார். இதையொட்டி விழுப்புரம் மாவட்டத்துக்கு 2 நாள் சுற்று பயணமாக நேற்று முன்தினம் நண்பகல் வருகை தந்தார்.

விழுப்புரம், விக்கிரவாண்டி, திண்டிவனம் சட்டப்பேரவைத் தொகுதியில் பிரச்சார பயணத்தை மேற்கொண்ட பழனிசாமி, திருச்சிற்றம்பலம் கூட்டு ரோட்டில் உள்ள நட்சத்திர விடுதியில் நேற்று முன்தினம் இரவு தங்கினார். திண்டிவனத்தில் பிரச்சார பயணத்தை முடித்து கொண்டு விடுதிக்கு சென்றவர், சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு, வானூர் அடுத்த திருவக்கரையில் உள்ள பழமையான வக்கரகாளியம்மன் கோயிலுக்கு நள்ளிரவு சுமார் 11.30 மணியளவில் சென்று சுவாமி தரிசனம் செய்தார்.

பவுர்ணமி என்பதால் அங்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் பங்கேற்று, வக்கரகாளியம்மனை மனமுருகி வேண்டினார். அவருக்கு, கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. திருவக்கரை வக்கிர காளியம்மன் கோயிலில், யார் ஒருவர் காலடி எடுத்து வைக்கிறாரோ, அவரது ஜாதகத்தில் உள்ள அனைத்து வக்கிரத் தோஷங்களும் விலகும் என்பது ஐதீகம்.

அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, அடுத்தாண்டு நடைபெறக் கூடிய சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கோயில் கோயிலாக சென்று சுவாமி தரிசனம் செய்து வருகிறார். இந்த வரிசையில், திருவக்கரை வக்கரகாளியம்மன் கோயிலும் இடம் பிடித்துள்ளது.

SCROLL FOR NEXT