தமிழகம்

4 சுங்கச் சாவடிகளில் அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது என்ற உத்தரவு நிறுத்திவைப்பு

செய்திப்பிரிவு

சென்னை: மதுரையில் இருந்து தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள கப்பலூர், எட்டூர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குனேரி ஆகிய 4 சுங்கச்சாவடிகளை கடந்து செல்லும் அரசு பேருந்துகளுக்கான சுங்க கட்டண நிலுவைத்தொகையாக ரூ.276 கோடி உள்ளதாகக்கூறி சம்பந்தப்பட்ட தனியார் சுங்கச் சாவடி நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ், சுங்க கட்டணமும் கோடிக்கணக்கில் நிலுவையில் இருப்பதால் ஜூலை 10 முதல் இந்த 4 சுங்கச்சாவடிகளின் வழியாக எந்த அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளையும் இயக்க அனுமதிக்கக்கூடாது என கடந்த இரு தினங்களுக்கு முன்பாக உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி அரசு தரப்பில் முறையிடப்பட்டது. அதன்படி இந்த வழக்கு நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, சுங்க கட்டண பாக்கி தொடர்பான பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையில் சம்பந்தப்பட்ட சுங்கச் சாவடி நிறுவனங்களுடன் போக்குவரத்துத் துறைச் செயலர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

விரைவில் நல்ல தீர்வு எட்டப்படும் என்பதால் 4 சுங்கச் சாவடிகளின் வழியாக அரசு பேருந்துகளை அனுமதிக் கக்கூடாது என பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும், என்றார். அதைப்பதிவு செய்து கொண்ட நீதிபதி, இந்த 4 சுங்கச்சாவடிகள் வழியாக அரசுப் பேருந்துகளை இயக்க அனுமதிக்கக்கூடாது என பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ஜூலை 31 வரை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT