தமிழகம்

புதுச்சேரியில் ஆளுநர், முதல்வர் இடையே வெடித்த மோதல் - பின்னணி என்ன?

செய்திப்பிரிவு

புதுச்சேரி: புதுச்சேரியில் ஆளுநர், முதல்வர் இடையே வெடித்த மோதலால், பாஜகவினர் சமாதானப்படுத்தும் பணியில் மும்முரமாகியுள்ளனர். இதுகுறித்து மேலிடத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர். புதுச்சேரி யூனியன் பிரதேச மாக இருப்பதால் ஆளுநருக்கே அதிகாரமுள்ளது.

திட்டங்களை நிறைவேற்ற ஆளுநரின் அனுமதி அவசியம். துறைக்கு அதிகாரி களை முதல்வர் பரிந்துரைக்க முடியுமே தவிர நேரடியாக நிய மிக்க முடியாது. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் அப்போதைய ஆளுநர் கிரன்பேடிக்கும், முதல்வர் நாராயணசாமிக்கும் இடையே கடும் மோதல் இருந்தது.

தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஆளுநராக தமிழிசை பொறுப்பேற்றார். அவருக்கும் ஆட்சியாளர்களுக்கும் இடையே சுமூக சூழல் உருவானது. இந்த நிலையில் மக்களவைத் தேர்த லில் போட்டியிட தமிழிசை ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார்.

இதனையடுத்து பிரதமர் மோடிக்கு நெருக்கமான ஐஏஎஸ் அதிகாரியான கைலாஷ்நாதன் புதிய ஆளுநராக பதவியேற்றார். அவர் ஆட்சியாளர்களுக்கு உறுதுணையாக இருந்தார். புதுவையில் ரேஷன் கடைகளை திறந்து இலவச அரிசியை விநியோகிக்க மத்திய அரசிடம் பேசி அனுமதி பெற்று தந்தார்.

டெல்லியில் பிரதமரை சந்திக்க முதல்வர் ரங்கசாமியையும் அறிவுறுத்தினார். இந்த நிலையில் புதுச்சேரியில் புதிய மதுபான ஆலைகளுக்கு அனுமதி வழங்க அரசு முடிவு செய் தது. ஏற்கெனவே புதுச்சேரியில் 5 மதுபான ஆலைகள் உள்ள நிலையில் புதிதாக மது ஆலைக ளுக்கு அனுமதி அளிப்பது சுற்றுச் சூழலையும் நீர் ஆதாரத்தையும் பாதிக்கும் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதனையடுத்து ஆளுநர் கைலாஷ்நாதன் புதிய மது ஆலைகளுக்கு அனுமதி தரவில்லை. இது ஆளுநர், முதல்வர் இடையிலான சுமூக உறவில் விரிசலை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் ஒய்வு பெற்று பணி நீடிப்பில் இருந்த புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் ரவிசந்திரன் 62 வயது எட்டியதால் அவரால் பதவியில் நீடிக்க இயலாது. அதனால் சுகாதாரத்துறையை வைத்துள்ள முதல்வர் ரங்கசாமி, ஆளுநர் கைலாஷ்நாதனுக்கு புதிய இயக்குநராக தற்போது துணை இயக்குநராக இருக்கும் பெண் அதிகாரி ஒருவர் பெயரை பரிந்துரை செய்து அனுப்பினார். ஆனால் இதனை ஆளுநர் ஏற்கவில்லை.

அதற்கு பதிலாக சீனியாரிட்டி அடிப்படையில் இந்திராகாந்தி பொதுமருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளர் செவ்வேலை சுகாதார துறை இயக்குநராக நியமித்து உத்தரவு வெளியிட்டார். ஆளுநர் தனது பரிந்துரையை ஏற்காதது முதல்வர் ரங்கசாமிக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. பேரவைத் தலைவர் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோரை அழைத்து தனது அதிருப்தியை கோபத்து டன் முதல்வர் ரங்கசாமி வெளிப் படுத்தியுள்ளார்.

பாஜகவுடன் கூட்டணியில் உள்ள போதே இப்படி செய்யலாமா என கேள்வியும் எழுப்பியுள்ளார். தொடர்ந்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் நேற்று முன்தினம் ஆளுநர் பங்கேற்ற அரசு விழாவை முதல்வர் ரங்கசாமி புறக்கணித்தார்.

இதனால் ஆளுநர், முதல்வர் இடையே மறைமுகமாக இருந்த மோதல் வெடித்தது. இதையடுத்து ஆளுநர் கைலாஷ்நாதனை சந்தித்து உத்தரவை திரும்ப பெற பேரவைத் தலைவர், அமைச்சர் உள்ளிட்டோர் வலியுறுத்தினர். ஆனால், ஆளுநர் அதற்கு சம்மதிக்கவில்லை. இதையடுத்து முதல்வர் ரங்கசாமியை பாஜகவினர் சமாதானபடுத்தும் பணியில் மும்முரமாகி யுள்ளனர். இதுகுறித்து பாஜகவினர் மேலிடத்துக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT