தமிழகம்

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழப்பு; 5 பேர் காயம் 

இ.மணிகண்டன்

சாத்தூர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் இன்று காலை ஏற்பட்ட வெடிவிபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். 5 பேர் காயமடைந்தனர்.

சிவகாசி அருகே திருத்தங்கலைச் சேர்ந்த கணேசன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று சாத்தூர் அருகில் உள்ள கீழத்தாயில்பட்டியில் செயல்பட்டு வருகிறது. நாக்பூர் உரிமம் பெற்று இயங்கி வரும் இந்த பட்டாசு ஆலையில் பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. ஆலையில் 50க்கும் மேற்பட்ட அறைகளில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு தயாரிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று ஏற்பட்ட வெடி விபத்தில் 15க்கும் மேற்பட்ட அறைகள் வெடித்துச் சிதறி தரைமட்டமாகின. வெடி மருந்து தயாரிக்கும் போது உராய்வு ஏற்பட்டு வெடி விபத்து ஏற்பட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் பனையடிப்பட்டியைச் சேர்ந்த பாலகுருசாமி என்பவர் உயிரிழந்தார். 5 பேர் காயமடைந்தனர். உயிரிழந்த பாலகுருசாமியின் சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், காயமடைந்த 5 பேர் சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

சாத்தூர் மற்றும் வெம்பக்கோட்டை தீயணைப்பு படை வீரர்கள் தீ அணைப்பு மற்றும் மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். விபத்து குறித்து வெம்பக்கோட்டை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT