தமிழகம்

அஜித்குமார் கொலை: ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி கோரிய தவெக மனுவை அவசர வழக்காக விசாரிக்க ஐகோர்ட் மறுப்பு

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: மடப்​புரம் கோயில் காவலர் அஜித்​கு​மார் காவல்துறை விசாரணையில் கொல்லப்பட்டதைக் கண்டித்து தவெக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்கக் கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

சிவகங்கை மாவட்​டம், திருப்​புவனம் காவல் நிலைய எல்​லைக்கு உட்​பட்ட மடப்​புரம் கோயில் காவலர் அஜித்​கு​மார் மரணத்​துக்கு நீதி கேட்​டும், உயர் நீதி​மன்​றத்​தின் நேரடிக் கண்​காணிப்​பின் கீழ் சிறப்​புப் புல​னாய்​வுக் குழு அமைத்து நீதி விசா​ரணை நடத்த வேண்​டும் என வலி​யுறுத்​தி​யும், கடந்த 4 ஆண்​டு​களில் 24 பேர் காவல் நிலை​யத்​தில் மரணம் அடைந்​தது குறித்து உயர் ​நீ​தி​மன்​றமே அதிருப்தி தெரி​வித்​துள்ள நிலை​யில், இதுகுறித்​து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளி​யிட வலி​யுறுத்​தி​யும் தமிழக வெற்​றிக் கழகத்​தின் சார்​பில் ஆர்ப்​பாட்​டம் அறிவிக்​கப்​பட்டிருந்​தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் மூன்பு இன்று (ஜூலை 4) தவெக சார்பில் ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி கோரும் மனுவை இன்று பிற்பகலில் விசாரணைக்கு எடுக்கக் கோரி முறையிடப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதி, “இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க என்ன அவசரம்?” என்று கேள்வி எழுப்பினார்.

“குற்றங்கள் செய்யாதீர்கள், போக்சோ குற்றங்களில் ஈடுபடாதீர்கள், மனைவியை கொடுமைப்படுத்தாதீர்கள் என்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். ஆங்கிலேயர் காலத்து சட்டங்களை திருத்தச் சொல்லுங்கள்.” என்று தவெக தரப்புக்கு அறிவுத்தினார்.

இந்த மனு எண்ணிடப்பட்டு வந்தால், திங்கள்கிழமை விசாரணைக்கு எடுக்கப்படும், என்று நீதபதி தெரிவித்தார்.

SCROLL FOR NEXT