ஆம்ஸ்ட்ராங் | கோப்புப்படம் 
தமிழகம்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு: காவல் துறை பதிலளிக்க உத்தரவு

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கில் காவல்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். இவர் கடந்த ஆண்டு ஜூலை 5-ம் தேதி தனது வீட்டின் அருகே வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கை செம்பியம் போலீஸார் நியாயமாக விசாரிக்கவில்லை எனக் கூறி, விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரி பகுஜன் சமாஜ் கட்சி மாநில பொதுச் செயலாளரும், ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரருமான கீனோஸ் ஆம்ஸ்ட்ராங் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

அவரது மனுவில், “ஒரு தேசிய கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பல முக்கிய அரசியல் கட்சியினரின் தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்து வரும் நிலையில், மாநில காவல் துறை இந்த வழக்கை சுதந்திரமாக விசாரிக்க முடியாது. இந்த கொலையில் தொடர்புடைய ‘சம்போ’ செந்தில் மற்றும் மொட்டை கிருஷ்ணன் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை கைது செய்வதற்கான முழுமையான நடவடிக்கைகளை காவல்துறை எடுக்கவில்லை. எனவே, இந்த வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும்,” என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டது” என்று தெரிவித்தார். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டார். அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் தங்களை விடுவிக்கக்கோரி மனுத்தாக்கல் செய்துள்ளனர். எனவே, விசாரணை நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்.” என கேட்கப்பட்டது. இதனை ஏற்க நீதிபதி மறுத்து விட்டார்.

SCROLL FOR NEXT