சென்னை: வரதட்சணை கொடுமை குற்றங்களுக்கு ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாவட்டம், அவினாசி கைகாட்டிப்புதூர் பகுதியை சேர்ந்த அண்ணாதுரையின் மகளுக்கும், கவின்குமார் என்பவருக்கும் 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில், அப்போது கொடுக்கப்பட்ட 300 பவுன் வரதட்சணை போதாது, 500 பவுன் வேண்டும் என கணவர் கவின்குமாரின் குடும்பத்தார் மனப்பெண்ணை பேராசைக்காக துன்புறுத்தியுள்ளனர்.
அதேபோல் திருவள்ளூர் மாவட்ட பொன்னேரி அருகே திருமணமான 4-வது நாளிலே புதுமணப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். வரதட்சணை தரவில்லை என்பதற்காக 2 பெண்கள் கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவங்கள் மனதுக்கு வேதனையளிக்கிறது. அந்த பெண்களை இழந்துவாடும் பெற்றோர்களின் மனநிலையை யோசிக்க வேண்டும்.
பெண்ணும், பொன்னும் ஒன்றுதான் என்று நினைப்பவர்கள் மத்தியில், பொன் என்னும் உலோகத்துக்கு ஆசைப்பட்டு திருமணமாகி நம்முடன் வாழவந்த பெண்ணின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குவது எந்த வகையில் நியாயம்? நாம் 20-ம் நூற்றாண்டில் இருக்கிறோம் என்றாலும் இன்னும் பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகள் குறையவில்லை என்பதற்கு இந்த இரண்டு மரணங்களும் சான்று.
வரதட்சணை கொடுமை செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு உச்ச பட்ச தண்டனையான ஆயுள் தண்டனை வழங்க வேண்டும். இனி இதுபோன்ற வரதட்சணை கொடுமை செய்து மரணங்கள் எங்கும் நடக்காத வண்ணம் இந்த அரசு பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.