சென்னை: திருப்புவனம் இளைஞர் கொலையில் தொடர்புடைய ஐஏஎஸ் அதிகாரி யார் என்பதை தமிழக அரசு விளக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழக காவல்துறையை, அதிகாரம் படைத்த சிலருக்கான அடியாள் படையாக செயல்பட வைத்து, அப்பாவி இளைஞர் ஒருவரின் கொலைக்கு காரணமாக திமுக அரசு இருந்துள்ளது.
திமுக எம்எல்ஏ உள்ளிட்டோர் அஜித்குமாரின் வீட்டிலேயே முகாமிட்டு யாரையும் சுதந்திரமாக பேச முடியாதவாறு தடுத்துள்ளனர். பாமகவின் பொருளாளரும் பல வகைகளில் தடுக்கப்பட்டிருக்கிறார்.
அப்பாவி இளைஞரை அடித்து விசாரணை நடத்த தூண்டிய ஐஏஎஸ் அதிகாரி யார் என்பதை தமிழக அரசு விளக்க வேண்டும். இதில் தொடர்புடைய காவல் துறை உயரதிகாரிகள் அனைவரும் பணியிடை நீக்கம் செய்யப்படுவதுடன், கைதும் செய்யப்பட வேண்டும்.
கொலை செய்யப்பட்ட இளைஞர் குடும்பத்துக்கு அரசால் வழங்கப்பட்ட உதவிகள் தவிர ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கப்பட வேண்டும். மனிதநேயத்துடன் பழகுவது குறித்து காவல்துறைக்கு பயிற்சி வகுப்பு நடத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.