புதுக்கோட்டை அருகே குடிநீர் தொட்டியில் விஷம் கலந்த விவகாரத்தில் குற்றவாளிகள் குறித்து இன்னும் தெரியவராத நிலையில், அந்த குடிநீர்த் தொட்டியின் ஆபரேட்டர் தூக்கிட்ட நிலையில் இறந்துகிடந்தார்.இவரது சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்களை போலீஸார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கோவிலூர் ஊராட்சி தெற்குமேலக்கோட்டை கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் குருணை மருந்து கலந்து இருந்ததால் குடிநீரை பயன்படுத்திய 110 பேர் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து தனிப்படை அமைத்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், தெற்கு மேலக்கோட்டையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் ஆபரேட்டராக பணிபுரிந்த முத்துச்சாமி மகன் வெள்ளைச்சாமி (39) வீட்டின் அருகே மரத்தில் தூக்கிட்ட நிலையில் பிணமாக தொங்கியது வியாழக்கிழமை தெரியவந்தது.
அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், அவரது சாவில் சந்தேகம் இருப்பதாகவும் குடிநீர் தொட்டியில் விஷம் கலந்த விவகாரம் தொடர்பாக இவரை யாரேனும் கொலை செய்திருக்கக்கூடும் என்றும் கூறி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து லேசாக தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்த போலீஸார், 48 பெண்கள் உட்பட 76 பேரை கைது செய்தனர்.