சத்தியமங்கலம் - மேட்டுப்பாளையம் சாலையில் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு சாலையை கடக்க இடைவெளி விடாமல், நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் ஆபத்தான முறையில் ஒருவழிப்பாதையில் பயணிக்க வேண்டியுள்ளது.
தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறையின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ஈரோடு - கோபி - சத்தியமங்கலம் வழியாக மேட்டுப்பாளையம் வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இப்பணியானது, ஈரோட்டில் இருந்து சித்தோடு வரையிலான 8.13 கிமீ தூரம் ஒரு திட்டப்பணியாகவும், சித்தோடு முதல் கோபி வரையிலான 30.60 கிமீ தூரமுள்ள நான்கு வழிச்சாலைப் பணிகள் ஒரு திட்டமாகவும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சத்தியமங்கலம் வழியாக மேட்டுப்பாளையம் வரை இந்த சாலையை விரிவாக்கம் செய்ய நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதில், சத்தியமங்கலத்தில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் உள்ள எஸ்.ஆர்.டி கார்னர் பகுதியில் இருந்து காந்திநகர் வரை ஒரு கிலோ மீட்டர் தொலைவில் சாலை விரிவாக்க பணி நடைபெற்று, தற்போது நான்கு வழிச்சாலை அமைக்கப் பட்டுள்ளது. இதற்காக இந்த சாலையின் நடுவே மையத்தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.
இதில், ஒரு கிலோ மீட்டார் தூரத்திற்கு, வலது புறம் மற்றும் இடது புறம் செல்வதற்கான இடைவெளி விடப்படவில்லை. இதனால், இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் ஒரு கிலோ மீட்டர் வரை சென்று திரும்பி வரும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனைத் தவிர்ப்பதற்காக வாகன ஓட்டிகள் ஒருவழிப் பாதையில் பயணித்து வருகின்றனர். இவ்வாறு ஒருவழிப் பாதையில் வாகனங்கள் பயணிக்கும் போது விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது: ஈரோடு - சித்தோடு - கோபி - சத்தியமங்கலம் - மேட்டுப்பாளையம் நான்கு வழிச்சாலை பணிகள் தொடங்கியது முதல் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு வருகிறது. இந்த சாலை அமைப்பதற்காக ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டன. விவசாய நிலங்கள் பறிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அதேபோல், ஈரோடு - கோபி இடையே சுங்கச்சாவடி அமைக்க இடம் தேர்வு பெற்று பணிகள் நடந்ததால், கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், சத்தியமங்கலம் - மேட்டுப்பாளையம் சாலையில் வாகனங்கள் சாலையைக் கடக்க போதுமான வழி விடாமல் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதனை நெடுஞ்சாலைத்துறை மாற்றி அமைக்க வேண்டும். இந்த திட்டப்பணிகள் தொடர்பாக அந்தந்த பகுதி மக்களிடம் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் முறையாக கருத்து கேட்டு இருந்தால், இதுபோன்ற பிரச்சினைகள் எழாது.
எனவே, இனிமேலாவது, சாலை அமைக்கும் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் அல்லது உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் கருத்து கேட்டு, சேவைச் சாலை, பாலங்கள், பேருந்து நிறுத்துமிடம், சாலையை கடக்கும் முக்கிய பகுதிகளை முடிவு செய்ய வேண்டும். அப்போதுதான், நெடுஞ்சாலை அமையும் பகுதியில் வசிக்கும் உள்ளூர் மக்களின் கோரிக்கைகள் நிறைவேறும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.