தமிழகம்

திருச்சியில் இருந்து கோவை வந்த மின்சார ஆம்னி பேருந்து தடுப்புச் சுவரில் மோதி தீக்கிரை

டி.ஜி.ரகுபதி

கோவை: திருச்சியில் இருந்து கோவை நோக்கி வந்த தனியார் மின்சார ஆம்னி பேருந்து, கருமத்தம்பட்டி அருகே தடுப்புச் சுவாில் மோதி விபத்தில் சிக்கியது. இதில் 17 பயணிகள் காயமடைந்தனர்.

திருச்சியில் இருந்து நேற்று (ஜூன் 28) இரவு 10.30 மணிக்கு மின்சார ஆம்னிப் பேருந்து கோவை நோக்கி புறப்பட்டது. பேருந்தை திருவண்ணாமலையைச் சேர்ந்த ஓட்டுநர் பசுபதி ஓட்டி வந்தார். பேருந்தில் 26 பயணிகள் இருந்தனர். இப்பேருந்து கருமத்தம்பட்டியைக் கடந்து, தனியார் உணவகம் அருகே இன்று (ஜூன் 29) அதிகாலை வந்தபோது, பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இருந்த தடுப்புச் சுவரில் மோதி நின்றது.

பேருந்து மோதிய வேகத்தில் அதில் அமர்ந்திருந்த பயணிகள் இருக்கையில் இருந்து கீழே விழுந்தனர். விபத்தால் அதிர்ந்த பயணிகள் அலறி அபயக்குரல் எழுப்பினர். இதைப் பார்த்த பின்னால் குஜராத்தில் இருந்து சூலூர் நோக்கி வந்து கொண்டிருந்த லாரியின் ஓட்டுநர் லாரியை நிறுத்தினார். பேருந்து கண்ணாடியை உடைத்து அதிலிருந்த பயணிகளை மீட்டனர்.

அடுத்த சில நிமிடங்களில் பேருந்தின் முன்பகுதியில் தீ பிடித்தது. தொடர்ந்து தீ மளமளவென பரவி பின்பகுதி வரை பரவி கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. தகவலறிந்த கருமத்தம்பட்டி மற்றும் சூலூர் தீயணைப்பு நிலையங்களில் இருந்து இரு தீயணைப்பு ஊர்திகள் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டு, பேருந்தில் பிடித்த தீ அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சில மணி நேரங்களுக்கு பிறகு பேருந்தில் பிடித்த தீ கட்டுப்படுத்தப்பட்டது.

இந்த விபத்தில் பேருந்து முழுவதும் எரிந்து சேதமடைந்தது. இதற்கிடையே பேருந்து தடுப்புச் சுவரில் மோதியதில் 17 பயணிகள் காயமடைந்தனர். அவர்கள் கோவை அரசு மருத்துவமனை, கோவை மற்றும் திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுச் சென்றனர். 9 பயணிகள் காயமின்றி தப்பினர். மாவட்ட தீயணைப்பு அலுவலர் சம்பவ இடத்துக்கு வந்து மீட்புப் பணியை துரிதப்படுத்தினார். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்தார். விபத்து ஏற்பட்டவுடன் பேட்டரி உள்ளிட்ட மின்சாதனங்களால் பேருந்தில் உடனடியாக தீப்பிடித்து இருக்கலாம் எனத் தெரிகிறது. இச்சம்பவம் தொடர்பாக கருமத்தம்பட்டி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

SCROLL FOR NEXT