டிடிவி தினகரன் | கோப்புப் படம் 
தமிழகம்

காவல் நிலைய மரணங்களுக்கு போலி கண்ணீர் தாண்டி முதல்வரின் பதில் என்ன? - டிடிவி தினகரன்

செய்திப்பிரிவு

சென்னை:காவல் நிலைய மரணங்கள் தொடர்பான திரைப்படங்களை பார்த்து போலிக் கண்ணீர் வடிக்கும் முதல்வர், தன் ஆட்சியில் சாமானிய மக்களின் மீது காவல்துறையின் மூலம் மனிதாபிமானமற்ற முறையில் கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகளுக்கு என்ன பதில் சொல்லப்போகிறார் ? என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வினவியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது வலைதள பக்கத்தில், “சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் ஒருவர் காவலர்கள் தாக்கியதில் உயிரிழந்திருப்பதாக நாளிதழ்களிலும் ஊடகங்களிலும் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்கி, அவர்களின் புகார்களுக்கு தீர்வு காண வேண்டிய காவல்துறை, விசாரணை எனும் பெயரில் கண்ணியமற்ற முறையிலும், காட்டு மிராண்டித்தனமாகவும் நடந்து கொள்வதே காவல் மரணங்களுக்கு அடிப்படை காரணம் என்ற புகார் எழுந்துள்ளது.

காவல் நிலைய மரணங்கள் தொடர்பான திரைப்படங்களை பார்த்து போலிக் கண்ணீர் வடிக்கும் முதல்வர், தன் ஆட்சியில் சாமானிய மக்களின் மீது காவல்துறையின் மூலம் மனிதாபிமானமற்ற முறையில் கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகளுக்கு என்ன பதில் சொல்லப்போகிறார் ?

ஒருவரை கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் காவல்துறையினருக்கு இல்லை என்றாலும், காவலர்கள் பற்றாக்குறை, அளவுக்கு அதிகமான பணிச்சுமை, தீராத மன அழுத்தம் ஆகியவை காவலர்களுக்கு உட்பட்ட அதிகாரத்தை மீறுவதற்கு காரணமாக அமைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

எனவே, காவல் நிலைய மரணங்களே இல்லை என்ற நிலையை அடைய வேண்டும் என மேடையில் பேசுவதோடு தன் கடமை நிறைவடைந்துவிட்டதாக கருதாமல் அதனை செயல்பாட்டிற்கு கொண்டுவருவதற்கான காவல்துறை சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்” என்று தினகரன் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT