தமிழகம்

கலாநிதி - தயாநிதி விவகாரம்: சன் குடும்ப மோதல்... கலைஞர் இல்லாத குறையை தீர்ப்பாரா ஸ்டாலின்?

Guest Author

சன் நெட்வொர்க் நிறுவனத்தின் பங்குகளை சட்டவிரோதமாக தனது பெயருக்கு மாற்றிக் கொண்டதாக கலாநிதி மாறனுக்கு தயாநிதி மாறன் நோட்டீஸ் அனுப்பியது குறித்து திமுக தரப்பில் விவரம் தெரிந்தவர்கள் கவலையுடன் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

சன் நெட்வொர்க் நிறுவனம், விமான சேவை, சினிமா, விளையாட்டு, பத்திரிகை உள்ளிட்ட பல துறைகளிலும் கால்ப​தித்து கோலோச்சி வருகிறது. இத்தனைக்​குமான ஆதாரப் புள்ளி கருணாநி​தியின் மனைவி தயாளு அமமாள், முரசொலி மாறனின் மனைவி மல்லிகா மாறன் ஆகியோரால் 1985 டிசம்பர் 12-ல் தொடங்​கப்பட்ட சுமங்கலி கேபிள் நிறுவனம் தான். இதன் அடுத்​தகட்ட வளர்ச்​சியாக தான் 1993 ஏப்ரல் 14-ல் சன் டிவி தொடங்கப்பட்டது.

முரசொலி மாறன் இருந்தவரை எல்லாம் சரியாகப் போய்க் கொண்டிருந்த நிலையில், அவரது மறைவுக்குப் பிறகுதான் கலாநிதி மாறன் சட்டவிரோதமாக சன் நெட்வொர்க்கின் பங்குகளை தனது பெயருக்கு மாற்றிக் கொண்டதாக இப்போது தெரிவித்​துள்ள தயாநிதி மாறன், “அப்பா இறந்த போதே, ‘சொத்துப் பரிவர்த்​தனைகள் தொடர்பாக ஏதும் செய்து​வைத்​திருக்​கிறீர்​களா?’ என தாத்தா (கருணாநிதி) கேட்டார். அதற்கு, ‘அப்பா இருந்தால் என்ன செய்வாரோ அதை கலாநிதி முறையாகச் செய்வார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்​கிறது’ என்று சொன்னேன்” என்று கூறி இருக்​கி​றார்.

இந்த நிலையில் அண்ணன் - தம்பிக்கு இடையில் இப்போது வெடித்​திருக்கும் இந்த பிரச்​சினையின் அண்மை நிலவரத்தை அறிந்த திமுக-​வினர், “கலாநிதி தான் சன் நெட்வொர்க் நிறுவனத்தை இந்தளவுக்கு வளர்த்​திருக்​கிறார் என்றாலும் அதில் தயாநி​தியின் பங்கும் இருக்​கிறது. அவரது சப்போர்ட் இருந்​ததால் தான் பிற மாநிலங்​களிலும் சேனல்களை தொடங்க முடிந்தது. அதற்காக அவர் பாதிக்குப் பாதி கேட்க​வில்லை. மொத்த சொத்து மதிப்பில் மூன்றில் ஒரு பங்கை தந்தால் போதும் என்றுதான் கேட்கி​றார். ஆனால் கலாநிதி தரப்பில், அதற்கு உடன்படவில்லை எனச் சொல்கி​றார்கள்.

கலைஞர் இருந்த போது குடும்​பத்​துக்குள் என்ன பிரச்சினை வெடித்​தாலும் அதை அத்தனை எளிதாக வெளியில் விடமாட்​டார். அவரது கையை மீறிப் போன விஷயம் என்றால், அழகிரிக்கும் மாறன் சகோதரர்​களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் தான். அழகிரி பற்றிய கருத்துக் கணிப்பை தினகரனில் போட வேண்டாம் என்று கலைஞர் சொன்னதையும் கேட்காமல், கருத்துக் கணிப்பை வெளியிட்​டதால் அழகிரி ஆதரவாளர்கள் மதுரையில் தினகரன் அலுவல​கத்தையே தீயிட்டுக் கொளுத்​தி​னார்கள்.

இந்தச் சம்பவத்​துக்குப் பிறகு, மாறன் சகோதரர்களை ஒதுக்​கி​வைத்த கலைஞர், அறிவால​யத்தை விட்டு சன் டிவி அலுவல​கத்​தையும் வெளியேற்​றி​னார். அதையடுத்து தான் 2007-ல் ‘கலைஞர் டிவி’-யை ஆரம்பித்தார் தலைவர். அப்போது, ‘திடீரென டிவி சேனல் தொடங்க எங்கிருந்து வந்தது பணம்?’ என எதிர்க்​கட்சி தலைவராக இருந்த ஜெயலலிதா கேள்வி எழுப்​பி​னார். ‘சன் டிவி-யில் இருந்த எனது மனைவி தயாளுவின் 20 சதவீத பங்குகளை விட்டுக் கொடுத்​ததில் 100 கோடி ரூபாய் வந்தது. அதில் தான் சேனல் தொடங்​கப்​பட்டது’ என்று சொன்னார் கலைஞர்.

மாறன் சகோதரர்களை ஒதுக்கி வைத்த கலைஞர் பிரச்​சினையின் தாக்கம் தணிந்​ததும், ‘கண்கள் பனித்​தது... இதயம் இனித்தது’ என்று சொல்லி அவர்களை மீண்டும் அரவணைத்துக் கொண்டார். இப்போது கலைஞரின் இடத்தில் முதல்வர் ஸ்டாலின் இருக்​கி​றார். அதனால் தான் விவகாரத்தை அவரது கவனத்​துக்கு கொண்டு போயிருக்​கிறார் தயாநிதி மாறன். திமுக-வின் வளர்ச்​சிக்கு சன் டிவி-யும் சன் டிவி-யின் வளர்ச்​சிக்கு திமுக-வும் பக்கபலம் என்பதை மறுப்​ப​தற்​கில்லை. திமுக குடும்​பத்​துக்குள் வாரிசு சண்டை வெடிக்காதா என எதிர்க்கட்சிகள் காத்துக் கொண்டிருக்​கின்றன. இந்த விவகாரத்தில் கலாநிதி மாறனுக்கு ஆதரவாகப் பேசுவது போல் அண்ணாமலை பேசி இருப்​ப​தையும் கவனிக்க வேண்டும்.

2ஜி வழக்கை வைத்து கலைஞர் டிவி-க்கு என்னவெல்லாம் குடைச்சல் கொடுத்​தார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். அதேபோல் தேர்தல் சமயத்தில் சன் குழும பிரச்​சினைக்குள் பாஜக மூக்கை நுழைத்தால் திமுகவுக்கு நல்லதல்ல. ஆகவே இதற்கு மேல் இதை வளர விடாமல் முதல்வர் ஸ்டாலின் தான் இரு தரப்பையும் அழைத்துப் பேசி பிரச்​சினையை சுமுகமாக முடிக்க வேண்டும்.

தான் கேட்டதை தராவிட்​டாலும் பொதுவான மதிப்​பீட்​டாளர் ஒருவரை வைத்து இரண்டு தரப்பும் ஏற்கும் வகையில் ஒரு நியாயத்தை தனக்குச் சொல்ல வேண்டும், ஸ்டாலின் மத்தி​யஸ்தராக இருந்து அதை செய்து கொடுக்க வேண்டும் என நினைக்​கிறார் தயாநிதி. இப்படி சுமுகமாக பேசி முடித்​து​விட்டால் மாறன் குடும்​பத்​தையும் சங்கடத்தில் இருந்து மீட்கலாம், சன் டிவி சப்போர்​ட்​டையும் திமுக தக்கவைத்துக் கொள்ளலாம்” என்கிறார்​கள்​. - எஸ்.சண்மதி

SCROLL FOR NEXT