தமிழகத்துக்குள் ஊடுருவ முயன்று, தனுஷ்கோடி அருகே கடலோரக் காவல் படையினரால் கைது செய்யப்பட்ட இலங்கை நாட்டவர்கள். 
தமிழகம்

இலங்கையில் இருந்து சட்ட விரோதமாக தமிழகத்தில் ஊடுருவ முயன்ற 3 பேர் கைது

செய்திப்பிரிவு

இலங்கையில் இருந்து சட்ட விரோதமாக தமிழகத்தில் ஊடுருவ முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

இலங்கையைச் சேர்ந்த குற்றப் பின்னணி உள்ள சிலர் தனுஷ்கோடி கடல் வழியாக தமிழகத்தில் ஊடுருவ இருப்பதாக கடலோரக் காவல் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் நள்ளிரவு தனுஷ்கோடி முதல் சர்வதேச கடல் எல்லை வரையிலான பகுதிகளில் கடலோர காவல் படையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, தனுஷ்கோடி அடுத்த 4-ம் மணல்திட்டு பகுதியில் சிலர் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நிற்பது தெரியவந்தது. அவர்களை கைது செய்த கடலோரக் காவல் படையினர் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு அழைத்து வந்து, மெரைன் போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையில் அவர்கள் முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த இலங்கைத் தமிழர் கபிலன் (34), நீர் கொழும்பு பகுதியைச் சேர்ந்த சுமித்ரோலன் பெர்னாண்டோ (43), மாதவிலக்கைச் சேர்ந்த சாகர குணதிலக (33) என்பதும், சட்டவிரோதமான முறையில் இலங்கை மன்னார் மாவட்டம் பேச்சாளையிலிருந்து படகு மூலம் தலா ரூ.2 லட்சம் செலுத்தி தனுஷ்கோடி வந்ததும் தெரியவந்தது. மேலும், தமிழகத்தில் ஊடுருவி, பின்னர் ஐரோப்பிய நாடுகளுக்கு தப்பிச்செல்ல திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது.

மேலும், இலங்கை தமிழர் கபிலன் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு 2 ஆண்டுகள் சிறையில் இருந்ததும், மற்ற இருவரும் போதைப் பொருள் கடத்தல் கும்பல்களுடன் தொடர்பில் இருப்பதும் தெரியவந்தது.

இலங்கையில் ‘கிளீன் ஸ்ரீலங்கா’ என்ற திட்டத்தின் கீழ் கொலை, கொள்ளை மற்றும் போதைப் பொருள் வழக்குகளில் தொடர்புடையவுர்களை கைது செய்து, கடும் தண்டனை விதித்து வருவதால், அந்நாட்டில் குற்றப் பின்னணி உள்ளவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதாக இலங்கை பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT