தமிழகம்

தமிழ்நாடு மின் கழக தொழிலாளர் முன்னேற்ற சங்க தேர்தலை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி நியமனம்: ஐகோர்ட்

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: திமுகவின் மின்வாரிய தொழிற்சங்கமான தமிழ்நாடு மின் கழக தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் தேர்தலை நடத்துவதற்கு உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி என்.கிருபாகரனை நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழ்நாடு மின்கழக தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் தஞ்சாவூர் சரக செயலாளராக இருந்த பால வெங்கடேஷ் என்பவர் தாக்கல் செய்த மனுவில், “சங்கத்துக்கு கடந்த 2019-ம் ஆண்டு தேர்தல் நடந்தது. அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் பதவிக்காலம் 2022-ம் ஆண்டு நிறைவடைந்து விட்டது. இருப்பினும், முறைப்படி தேர்தல் நடத்தாமல் ஏற்கெனவே இருக்கக்கூடிய தலைவர், பொதுச் செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் தங்களது பதவியை தவறாக பயன்படுத்தி வருகின்றனர்,” என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி கே.குமரேஷ் பாபு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், 2021-ம் ஆண்டு தேர்தல் நடத்தப்பட்டது. அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு பொதுக்குழுவில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தேர்தல் நடத்தப்பட்டதாக கூறினாலும், அவர்களின் பதவிக் காலம் 2024-ம் ஆண்டு நிறைவடைந்து விட்டது. எனவே, தமிழ்நாடு மின்கழக தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் நிர்வாகியாக சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி என்.கிருபாகரனை நியமித்து உத்தரவிட்டார். அவர் தலைமையில் சங்க தேர்தலை ஆறு மாதத்தில் நடத்தி முடிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி வழக்கை முடித்து வைத்தார்.

SCROLL FOR NEXT