தமிழகம்

வாக்குச்சாவடி நிலைய முகவராக மாவட்ட செயலாளர்கள் நியமனம்: திருமாவளவன் தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: மாவட்டச் செயலாளர்களை வாக்குச்சாவடி நிலைய முகவர்களாக நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

இதுகுறித்து, முகநூல் நேரலையில் அவர் கூறியதாவது: தமிழக அரசியலில் விசிகவின் அரசியல் ஆதரவாகவோ எதிராகவோ தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. பேரணி, விருது வழங்கும் விழாவக்காக பணியாற்றி வருகிறோம். வரும் ஜூன் 30-ம் தேதி மேலவளவு முருகேசன் உள்ளிட்டோருக்கு அஞ்சலி நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது.

இதுபோன்ற நிகழ்வுகளில் விசிகவினர் கட்டுப்பாடுடன் செயல்பட்டு சாதி, மதவாதிகள் விமர்சிக்க வாய்ப்பு தந்துவிடாமல் இருக்க வேண்டும். எந்தளவு கட்டுப்பாட்டை கடைபிடிக்கிறோமோ அந்தளவு நிதானமாக பயணிக்க முடியும். அரசியலை மக்களிடம் வெகுவாக கொண்டு சேர்க்க முடியும்.

இதற்கிடையே, வரும் தேர்தலையொட்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு ஒரு வாக்குச்சாவடி நிலைய முகவர்களை நியமிக்க இருக்கிறார்கள். ஓரிரு நாட்களில் பட்டியலை தேர்தல் துறைக்கு ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு நியமிக்கப்படுபவர்கள் வாக்காளர் பட்டியலை சரிபார்த்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வார்கள்.

இவர்களில் பெரும்பாலானோர் மாவட்டச் செயலாளர்களாக இருப்பர். மீதமுள்ள தொகுதிகளுக்கு சட்டப்பேரவைத் தொகுதிச் செயலாளர்கள் அல்லது மாவட்டச் செயலாளர்களாக நியமிக்கப்பட இருப்பவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்.

அவர்கள் இரண்டாம் நிலை முகவர்களை ஜூலை 7-ம் தேதிக்குள் நியமிக்க வேண்டும். இதுதொடர்பான பயிற்சி வகுப்புகளை மண்டல வாரியாக தேர்தல் பணிக்குழு செயலர் குணவழகன், தலைமை நிலையச் செயலர் பாலசிங்கம் ஆகியோர் மேற்கொள்வர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT