தமிழகம்

பகுதி நேர வேலை என கூறி இளம் பெண்ணிடம் ரூ.4.62 லட்சம் மோசடி செய்தவர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: பகுதி நேர வேலை எனக் கூறி இளம் பெண்ணிடம் ரூ.4.62 லட்சம் மோசடி செய்த பெங்களூரை சேர்ந்த பெண்ணை போலீஸார் கைது செய்தனர். சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்தவர் லட்சுமி (26). மண்ணடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் லட்சுமியின் இன்ஸ்டாகிராம் ஐடி-க்கு பகுதி நேர வேலை சம்பந்தமாக லிங் ஒன்று வந்தது. அதை கிளிக் செய்தவுடன் லட்சுமியை தொடர்பு கொண்ட பெண் ஒருவர், சில வேலைகளை கொடுத்துள்ளார்.

அந்த வேலைகளை முடிக்க முடிக்க லட்சுமிக்கு சிறிய அளவிலான லாபம் கிடைத்துள்ளது. இதையடுத்து அதிக அளவில் லாபம் சம்பாதிப்பதற்காக, அந்த நபர் கூறிய வங்கிக் கணக்குக்கு லட்சுமி ரூ.4,62,130-ஐ அனுப்பியுள்ளார். அதன் பிறகு லட்சுமிக்கு எந்தவித லாப பணமும் கிடைக்கவில்லை. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து, கிழக்கு மண்டல சைபர் கிரைம் போலீஸில் அவர் புகார் அளித்தார்.

வழக்குப்பதிவு செய்த போலீஸார், அடையாளம் தெரியாத நபர் பயன்படுத்திய வங்கிக் கணக்கு விவரங்கள், செல்போன், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றின் ஐபி விவரங்களை கொண்டு விசாரணை நடத்தினர். விசாரணையில், லட்சுமியிடம் மோசடியில் ஈடுபட்டது கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த லில்லி புஷ்பா(27) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீஸார் சிறையில் அடைத்தனர்.

SCROLL FOR NEXT