சென்னை: சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் முன்ஜாமீன் கோரி எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணையை உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் அமர்வுக்கு மாற்றி தலைமை நீதிபதி உத்தரவி்ட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு களாம்பாக்கத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் கே.வி,குப்பம் எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பி.வேல்முருகன், நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகியிருந்த ஏடிஜிபி எச்.எம்.ஜெயராமை கைது செய்து விசாரிக்கவும், எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கவும் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி போலீஸார் ஏடிஜிபி ஜெயராமை போலீஸார் கைது செய்து விசாரித்தனர். பின்னர் மறுநாள் மாலையில் அவரை விடுவித்தனர். இதற்கிடையே ஜெயராமை இடைநீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.
உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து ஜெயராம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஏடிஜிபி ஜெயராமை கைது செய்ய உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு கண்டனம் தெரிவித்து அந்த உத்தரவை ரத்து செய்தனர். மேலும் பூவை ஜெகன்மூர்த்தி முன்ஜாமீன் கோரிய மனு மீதான விசாரணையை வேறு நீதிபதிக்கு மாற்றவும் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்திருந்தனர்.
அதன்படி பூவை ஜெகன்மூர்த்திக்கு முன்ஜாமீன் கோரிய மனு மீதான விசாரணையை நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் அமர்வுக்கு மாற்றி தலைமை நீதிபதி உத்தரவிட்டிருந்தார். அதன்படி இந்த வழக்கு நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அதையடுத்து நீதிபதி வழக்கை இன்றைக்கு தள்ளி வைத்துள்ளார்.