கோப்புப்படம் 
தமிழகம்

தொழிற்சாலைகளில் பாதுகாப்பை மேம்படுத்த நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும்: தொழில்துறை செயலர் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: தொழிற்சாலைகளில் பாதுகாப்பை மேம்படுத்த, நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும் என தொழில்துறை செயலர் அருண்ராய் தெரிவித்தார்.

இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு சார்பில், ரசாயன தொழிற்சாலை பாதுகாப்பு குறித்த கருத்தரங்கம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற தொழில்துறை செயலர் வி.அருண்ராய் பேசியதாவது:

தமிழகத்தைப் பொருத்தவரை குறிப்பிட்ட ஒரு நகரத்தில் மட்டும் கவனம் செலுத்தி தொழில் நிறுவனங்களை பெருக்குவதில்லை. மாநிலம் தழுவிய அளவில் தொழில் மயமாக்கப்படுகிறது. அந்த வகையில், தமிழகத்தில் தற்போது, 2,500-க்கும் அதிகமான ரசாயன உற்பத்தி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்திய அளவில் 6 சதவீத அளவிலான ரசாயனத்தை தமிழகம் உற்பத்தி செய்கிறது.

ரசாயன தொழிற்சாலை பாதுகாப்புக்கான வழிமுறைகளை வழங்குவதிலும், தொழிற்சாலைகள் தரப்பிலும் சில குழப்பங்கள் இருக்கின்றன. இதற்கு தீர்வு காண வேண்டுமானால், உலகளவில் பின்பற்றும் வழிகாட்டுதல்களை வழங்காமல், தொழிற்சாலை அமைந்துள்ள பகுதிகளில் பின்பற்றும் வகையிலான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து வழங்க வேண்டும். தொழிற்சாலைகளைப் பொருத்தவரை அனைத்து நிலையில் உள்ள ஊழியர்களும் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வழங்கும் வகையில் புரிதலை ஏற்படுத்த வேண்டும்.

இவையனைத்துக்கும் மேலாக பாதுகாப்பை மேம்படுத்த நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும். தொழிற்சாலைகளுடன் இணைந்து தமிழக அரசு பணியாற்றி, பாதுகாப்பை உறுதி செய்து வருகிறது. அரசு தரப்பில் தேவைகள் இருந்தால் தயங்காமல் அணுகலாம். அனைவருடனும் இணைந்து 1 ட்ரில்லியன் பொருளாதாரத்தை எட்டுவோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நிகழ்வில், இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு தமிழக தலைவர் ஜி.எஸ்.கே. வேலு, திருமலை கெமிக்கல் மேலாண் இயக்குநர் ரம்யா பரத்ராம், சிபிசிஎல் மேலாண் இயக்குநர் எச்.சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT