தமிழகம்

அரசுப் பணிகளுக்கான கட்டுமானப் பொருட்கள் விலை பட்டியலை 2 வாரத்தில் வெளியிட அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

செய்திப்பிரிவு

மதுரை: அரசு ஒப்பந்ததாரர்களுக்கான கட்டுமானப் பொருட்களின் விலை நிர்ணயப் பட்டியலை 2 வாரத்தில் வெளியிடுமாறு தமிழக அரசுக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ராஜகோபாலபுரத்தைச் சேர்ந்த சுப்ராம், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: நான் நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்ததாரராக உள்ளேன். நெடுஞ்சாலைப் பணிகள் மற்றும் அரசு கட்டிடப் பணிகளை ஒப்பந்தம் எடுத்துள்ளேன். கட்டுமானத் துறையில் நேரடியாகவும், மறைமுகமாகவும் பல லட்சம் பேர் பணிபுரிந்து வருகின்றனர். தமிழகத்தில் கட்டுமானப் பொருட்களின் விலை அதிகரித்து வருகிறது. இதனால் அரசு ஒப்பந்ததாரர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் அரசுத் துறைகளில் முறையாக டெண்டர் எடுத்து, அரசு திட்டங்களின் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வரும் ஒப்பந்ததாரர்களுக்கு 2025- 2026 ஆண்டுக்கான கட்டுமானப் பொருட்களின் விலைப் பட்டியல் ஏப்ரல் மாதம் வெளியிட்டிருக்க வேண்டும். இதுவரை வெளியிடப்படவில்லை. ஒப்பந்ததாரர்களுக்கான கட்டுமானப் பொருட்களின் விலைப் பட்டியல் உரிய காலத்தில் வெளியிட்டால் மட்டுமே, அந்த விலைப் பட்டியல் அடிப்படையில் ஒப்பந்தப்புள்ளி தயாரிக்க முடியும்.

2024-2025 ஆண்டு விலை நிர்ணய தொகையின் அடிப்படையில் தற்போது ஏலம் நடத்தப்படுகிறது. இதனால் அரசு ஒப்பந்ததாரர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. 2024 - 2025 ஆண்டில் நிர்ணயம் செய்யப்பட்ட சிமென்ட், ஜல்லி, மணல் விலை தற்போது 50 சதவீதத்திலிருந்து 100 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. கட்டிடத் தொழிலாளர்களின் சம்பளமும் 50 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த சூழலில், அரசு இந்த ஆண்டுக்கான விலை நிர்ணய பட்டியலை வெளியிடாமல் இருப்பது சரியல்ல.

இது தொடர்பாக தமிழக நிதித் துறை, பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை செயலருக்கு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, அரசு ஒப்பந்ததாரர்களுக்கான இந்த ஆண்டு கட்டுமானப் பொருட்களின் விலை நிர்ணயப் பட்டியலை உடனடியாக வெளியிட உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதி எஸ்.ஸ்ரீமதி விசாரித்து, "ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் மாதம் வெளியிடப்படும் விலை நிர்ணய பட்டியலை இன்னும் ஏன் வெளியிடவில்லை? இவ்வாறு இருந்தால் ஒப்பந்ததாரர் எவ்வாறு விலை நிர்ணயம் செய்து ஒப்பந்தப்புள்ளி கேட்க முடியும்? விலைவாசி உயர்ந்துள்ளது. அரசு ஒப்பந்ததாரர்களுக்கான கட்டுமானப் பொருள்களின் விலை நிர்ணயம் குறித்த பட்டியலை 2 வாரத்தில் வெளியிட வேண்டும்" என்று உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT