தமிழகம்

‘கருணாநிதியின் விருப்பத்துக்கு முரணானது...’ - ‘கனவு இல்லம்’ அரசாணை திருத்தத்துக்கு ஐகோர்ட் கண்டனம்

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு விருது பெற்ற எழுத்தாளர்களுக்கு அரசே வீடு ஒதுக்கீடு செய்து விட்டு, அதை ரத்து செய்தது இலக்கியவாதிகளை அவமதிக்கும் செயல் என சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் 97-வது பிறந்த நாளை முன்னிட்டு, ஞானபீடம், சாகித்திய அகாடமி விருதுகள் பெற்று, தமிழுக்கு தொண்டாற்றிய எழுத்தாளர்களை கவுரவிக்கும் வகையில் கடந்த 2022-ம் ஆண்டு ‘கனவு இல்லம்’ எனும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ், ‘கல்மரம்’ என்ற நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழகத்தின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி திலகவதிக்கு, சென்னை அண்ணா நகரில் 1409 சதுர அடி வீடு கடந்த 2022-ம் ஆண்டு ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில், ஏற்கெனவே தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் வீடு ஒதுக்கீடு பெற்றுள்ளதாக கூறி, ‘கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் திலகவதிக்கு வீடு ஒதுக்கீடு செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து 2024-ம் ஆண்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து திலகவதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவில், “ஏற்கெனவே சொந்தமாக வீடு இருந்தாலும், ‘கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் எழுத்தாளர்கள் வீடு ஒதுக்கீடு பெற தகுதி உண்டு என 2022-ம் ஆண்டு அரசாணையில் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், அதனை மாற்றி வீட்டு வசதி வாரியத்தில் வீடு ஒதுக்கீடு பெற்றவர்கள் ‘கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு பெற தகுதி இல்லை என அரசாணையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது” என்று மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது திலகவதி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சேவியர் அருள் ராஜ், “கவிஞர் மு.மேத்தா உள்ளிட்டோருக்கும் ‘கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, “வீடு ஒதுக்கீடு செய்யும்படி யார் கேட்டது? அரசே வீடு ஒதுக்கீடு செய்து விட்டு அதை ரத்து செய்தது சாகித்ய அகாடமி போன்ற உயரிய விருதுகளை பெற்ற இலக்கியவாதிகளை அவமதிக்கும் செயல். இது துரதிருஷ்டவசமானது. இலக்கியவாதிகளை இவ்வாறு நடத்தக் கூடாது” என கண்டனம் தெரிவித்தார்.

மேலும், “தமிழுக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்களை மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி தனது வாழ்நாள், இறுதி வரை கவுரவப்படுத்தினார். தற்போது அரசு பிறப்பித்துள்ள திருத்த அரசாணை, கருணாநிதியின் விருப்பத்துக்கு முரணானது. இந்த அரசு கருணாநிதியின் விருப்பத்துக்கு மாறாக செயல்படாது என நம்புகிறேன். திருத்தம் செய்வதாக இருந்தால் கூட அதை முன் தேதியிட்டு அமல்படுத்தக் கூடாது” எனக் கூறி, கவிஞர் மு.மேத்தாவுக்குகு வீடு ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்படவுள்ள வழக்குடன் சேர்த்து இந்த வழக்கையும் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக கூறி விசாரணையை ஜூலை 9-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

SCROLL FOR NEXT