தமிழகம்

சினிமாவை மிஞ்சும் விறுவிறுப்பு: ‘எங்க தலைவனை தூக்கிட்டு போய்டுவிங்களா’?- சேலம்-கொச்சி நெடுஞ்சாலையில் கேரள போலீஸை மிரட்டி கந்துவட்டி குற்றவாளியைக் கடத்திய கும்பல்

வில்சன் தாமஸ்

சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாகத் தமிழகத்தின் ஸ்ரீபெரும்பதூரில் கைது செய்யப்பட்ட குற்றவாளியை கேரள போலீஸார் கொச்சிக்கு அழைத்துச் செல்லும் போது, சினிமாவில் வரும் காட்சிபோன்று, நடுவழியில் அவர்களிடம் இருந்து குற்றவாளியை அவரின் கும்பல் மீட்டுச் சென்ற சம்பவம் நடந்துள்ளது.

இந்த சம்பவம் சேலம்-கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் கனியூர் சுங்கச்சாவடி அருகே சனிக்கிழமை இரவு நடந்துள்ளது.

சென்னை, விருகம்பாக்கம் அருகே நடேசன் நகரைச் சேர்ந்தவர் பி. மகாராஜன்(வயது41). இவர் கேரளவில் அதிகமான வட்டிக்குக் கடன் கொடுத்து தொழில் செய்துவந்துள்ளார்.

கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மாத்யூ ஜேக்கப் என்பவர் கொச்சி போலீஸில் மகாராஜன் மீது புகார் செய்தார். தன்னிடம்ய பெற்ற ரூ.40 லட்சத்தை திரும்பித் தராமல் ஏமாற்றுகிறார் என்று மாத்யூ புகார் அளித்தார்.

இந்த புகாரை விசாரித்த கொச்சி பல்லுறுத்தி போலீஸார் மகாராஜன் கூட்டாளிகள், இச்சக்கிமுத்து, சித்தரசு, ராஜ்குமார் ஆகியோரைக் கடந்த மார்ச் மாதம் கேரள கந்துவட்டி தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

அவர்களிடம் தொடர்ந்து விசாரணை, நடத்தி மகாராஜனை தேடி வந்தனர். இதற்கு “ஆப்ரேஷன் குபேரா” என்ற பெயர் வைத்து தேடி வந்தனர்.

இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் , ஸ்ரீபெரும்புதூரில் மகாராஜன் பதுங்கி இருப்பதைக் கொச்சி போலீஸார் கண்டுபிடித்தனர். அதன்படி, கடந்த சனிக்கிழமை காலையில் மகாராஜன் உள்பட 3 பேரை துணை ஆய்வாளர் அனிஷ் குமார் தலைமையிலான 4 பேர் கொண்ட கொச்சி போலீஸார் கைது செய்தனர்.

மாகாராஜன் உள்ளிட்ட 4 பேரையும் முறைப்படி டிரான்சிஸ்ட் போட்டு கேரளாவுக்கு கொண்டு சென்றனர். சேலம்-கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் இரவு வந்து கொண்டு இருந்தனர். கேரள எல்லைக்குள் நுழைய ஒரு மணிநேரம் இருக்கும்நிலையில், கனியூர் சுங்கச்சாவடி அருகே போலீஸாரின் வாகனத்தை 10 பேர் கொண்ட ஒரு கும்பல் மடக்கியது.

மகாராஜன் உள்ளிட்ட 3 பேரை கொச்சி போலீஸார் கேஎல் 07 பிஎச் 7779 என்ற எண்ணில் அழைத்து வருகிறார்கள் என்பதை அந்தக் கும்பல் தெரிந்து வைத்துக்கொண்டு அந்த வாகனம் வரும்போது, இரவு 11.30 மணி அளவில் மடக்கினார்கள். தாங்கள் குற்றவாளியை அழைத்துச் செல்கிறோம் என்று கேரள போலீஸார் கூறினார். அதை காதில் வாங்காமல், அந்த இரு வாகனங்களில் இருந்த 10—க்கும் மேற்பட்டோர் கேரள போலீஸாரை மிரட்டி தங்களின் தலைவர் மகாராஜனை தங்களுடன் அனுப்பிவிடக்கோரினார்கள்.

முதலில் போலீஸார் மறுக்க பிறகு  அவர்களிடம் இருக்கும் பயங்கர ஆயுதங்களைப் பார்த்து, மகாராஜனை விட்டுவிட்டனர். அந்த 2 வாகனங்களாலும் வந்த 10-க்கும் மேற்பட்டோர் மகாராஜனை போலீஸாரிடம் இருந்து மீட்டு, சேலம் நோக்கிச் சென்றுவிட்டனர்.

சினிமா போன்று சிலநிமிடங்களில் நடந்த சம்பவத்தைக் கண்டு கேரள போலீஸார் திகைத்துவிட்டனர். செய்வது அறியாது, பாலக்காடு போலீஸ் துணை கண்காணிப்பாளருக்குத் தகவல் தெரிவித்தனர். அவர்கள் அருகே இருக்கும் தமிழக போலீஸ்நிலையத்தில் புகார் அளிக்கவும் எனக் கூறியுள்ளனர்.

இதையடுத்து, கருமத்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் கொச்சி போலீஸார் நடந்த சம்பவங்களைக் கூறி அதிகாலை 2.30 மணிக்கு புகார் அளித்தனர். அதன்பின், கோவை மாவட்ட போஸீல் எஸ்.பி. பா. மூர்த்தி உத்தரவின் பெயரில் அடையாளம் தெரியாதவர்கள் என்ற அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து போலீஸார் அந்த கும்பலைத் தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT